Wednesday, 7 September 2011

மமதையில் மம்தா!

பிரதமரான பிறகு உலகில் பல்வேறு நாடுகளுக்கு நல்லிணக்கப் பயணம் சென்றுள்ள பிரதமர் மன்மோகன் சிங், அண்டை நாடான வங்க தேசத்துக்கு அரசுமுறைப் பயணமாகச் செல்வது இதுதான் முதல் தடவை. அதிலும் அந்த நாட்டுடன் சுமுகமான நல்லுறவு ஏற்படுத்திக் கொள்வதன் மூலம் தெற்காசியாவில் இந்தியாவின் ஆதிக்கத்தைப் பலப்படுத்திக் கொள்ள நினைக்கும் பயணம். ஆனால், அத்தனை கனவுகளையும் தகர்த்தெறிந்து குட்டி நாடான வங்க தேசத்துக்குப் பலமான இந்தியாவின் பலவீனமான பிரதமராக மன்மோகன் சிங்கை அனுப்பி வைத்திருக்கிறார் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி.

பிரதமர் மன்மோகன் சிங் நல்லிணக்கப் பயணமாக வங்கதேசம் சென்றுள்ள இந்த வேளையில் தீஸ்டா நதிநீர்ப் பங்கீடு தொடர்பான கருத்துவேறுபாடு காரணமாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இப்பயணத்தைப் புறக்கணிக்கும் நடவடிக்கையில் இறங்கியிருப்பது பிரதமருக்குத் தர்மசங்கடத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்றால் இந்தியாவுக்கு சர்வதேச அளவில் அவமானம் ஏற்பட்டிருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.

தீஸ்டா நதிப் பிரச்னை 1990-லிருந்தே இருக்கிறது. இரு நாடுகளின் வல்லுநர்கள் மற்றும் அமைச்சர்களைக் கொண்ட நதிநீர்ப் பங்கீட்டு ஆணையம் 2003-ம் ஆண்டிலிருந்து சந்தித்துக்கொண்டிருக்கிறது. கடைசியாக மார்ச் 2010-ல் நடந்த கூட்டத்தில் தீஸ்டா நதிநீர்ப் பகிர்வு ஒப்பந்தம் ஓராண்டில் கையெழுத்திடுவது என்ற அறிவிப்பும் வெளியானது.

தீஸ்டா நதி என்பது சிக்கிம் மாநிலத்தில் உள்ள பன்ஹுன்ரி பனிச் சிகரங்களில் இருந்து உருவாகி மலைப்பகுதியில் 150 கி.மீ. தூரத்தைக் கடந்து மேற்கு வங்கத்தில் 120 கி.மீ. பாய்ந்து, வங்கதேசத்தை அடைகிறது. வங்கதேசத்திலும் ஏறத்தாழ 124 கி.மீ. பாய்ந்து தீஸ்டாமுக் என்கிற இடத்தில் பிரம்மபுத்ரா நதியில் கலக்கிறது. இந்த நதியால் ஏறத்தாழ 12,729 சதுர கி.மீ. விளைநிலங்கள் பாசனவசதி பெறுகின்றன. அதில் 83% இந்தியாவிலும் வெறும் 17% தான் வங்கதேசத்திலும் உள்ளன என்பதுதான் வேடிக்கை.

இந்தியா கசால்தோபா என்கிற இடத்தில் தடுப்பணை கட்டி, கால்வாய்கள் மூலம் விவசாயத்துக்கு அந்த நதிநீரைப் பயன்படுத்துகிறது என்றால், வங்கதேசம் தாலியா என்கிற இடத்தில் தடுப்பணை கட்டி, கால்வாய்ப் பாசனத்துக்குப் பயன்படுத்துகிறது. மழைக்காலத்தில் வெள்ளப்பெருக்கால் சேதங்களை ஏற்படுத்தும் தீஸ்டா, கோடைக்காலத்தில் போதுமான அளவு நீரில்லாமல் இருப்பதுதான் நதிநீர்ப் பிரச்னை ஏற்படக் காரணம். ஏறத்தாழ, நமது காவிரிநீர்ப் பிரச்னைபோல என்று வைத்துக் கொள்ளலாம்.

தீஸ்டாவைப் போலவே திரிபுராவில் உருவாகி இந்திய வங்கதேச எல்லையை ஒட்டியபடி ஓடி கடலில் கலக்கும் பெனி நதியின் நீர்ப்பங்கீட்டுப் பிரச்னையும் தீஸ்டாபோலவே தீராமல் இருக்கிறது. 1996-ல் கங்கை நதிநீர்ப் பங்கீடு சுமுகமாக நடந்தேறிய பிறகும், தீஸ்டா, பெனி, மனு, கோவாய், கும்தி, முகுரி, தரியா, டோர்ஸô போன்ற நதிநீர்ப் பங்கீட்டுப் பிரச்னைகள் தொடர்ந்தவண்ணம் இருந்தன. பல ஆண்டுகள் அதிகாரிகள் அளவில் பேச்சுவார்த்தை நடந்து வந்தது. இப்போது ஒரு முடிவுக்கு வர இருந்த வேளையில்தான் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஒரு முட்டுக்கட்டை போட்டிருக்கிறார்.

நதிநீரைப் பொறுத்தவரையில் அது மாநில அட்டவணையில் உள்ள விவகாரம். எல்லை கடக்கும் நதிகள் குறித்து இரு நாடுகள் ஒப்பந்தம் செய்யும்போது, மாநில அரசின் கருத்தையும் கேட்டுத்தான் ஒப்பந்தங்கள் போடப்பட வேண்டும். இந்த விதிமுறை மீறப்படவில்லை என்பது மம்தாவுக்கு மிக நன்றாகத் தெரியும். புது தில்லியிலும் வங்கதேசத் தலைநகர் டாக்காவிலும் உள்ள அதிகாரிகளுக்கும் தெரியும்.

வங்கதேசம் ஒரு குட்டி நாடு. அதில் 57 நதிகள் அண்டை நாடுகளிலிருந்து வந்து சேர்பவை. இவற்றில் மிக முக்கியமான கங்கை, பிரம்மபுத்ரா நதிகள் வெறும் கழிவுநீராகத்தான் அங்கே வந்து சேர்கின்றன. வங்கதேச விவசாயிகள் தங்கள் வேளாண்மைக்கு இந்த நதிகளின் நீரைத்தான் நம்பியிருக்க வேண்டியிருக்கிறது. ஃபராக்கா அணைத் திட்டம் அமலுக்கு வந்த நாள் முதலாக இந்த நதிநீர்ப் பிரச்னை தலையெடுக்கத் தொடங்கிவிட்டது. தங்கள் விவசாயத்துக்குத் தண்ணீர் வருவதைத் தடுத்துவிட்டார்கள் என்று வங்கதேசம் தொடர்ந்து புகார் சொல்லத் தொடங்கியது.

வங்கதேசத்தின் விவசாயத்தில் 15 சதவீதம் தீஸ்டா நதிக்கரை விளைநிலங்களில்தான் நடக்கிறது. நதிநீர் இல்லாதபோது விவசாயிகள் நஷ்டமடைகிறார்கள். விளைச்சல் குறைகிறது. உணவுத் தட்டுப்பாடு ஏற்படுகிறது. வங்கதேசத்தில் உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டால் அந்த நாட்டுக்குப் பிரச்னை இல்லை, ஆமாம். அங்கிருந்து மக்கள் கூட்டங்கூட்டமாக கொல்கத்தாவுக்கும், இந்தியாவின் பிற பகுதிகளுக்கும் எல்லை கடந்து ஊடுருவல் செய்வார்கள் - மிக எளிதாக இது நடைபெறும். இதன் தொடர்விளைவுகள் இந்தியாவுக்கு நிச்சயமாக நல்லதல்ல.

ஏற்கெனவே, ஃபராக்கா அணையால் பாதிக்கப்பட்டுள்ளோம் என்று வங்கதேசம் கூறிக்கொண்டிருக்கும் நிலையில், சிக்கிம் மாநிலத்தில் 50,000 மெகாவாட் புனல்மின்நிலையம் தீஸ்டா நதியின் குறுக்கே அமைக்கப்படுகிறது. பத்து ஆண்டுகளில் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ள இத்திட்டத்துக்கு 31 பில்லியன் அமெரிக்க டாலர் செலவாகும். இப்போது பணத் தட்டுப்பாட்டின் காரணமாகத் திட்டம் விரைவாக நடைபெறவில்லை, அவ்வளவே. பிரம்மபுத்ராவில் சீனா அணை கட்டுகிறது என்று இந்தியா புலம்புவது எத்தகைய நியாயமான செய்கையோ அதே நியாயம் வங்கதேசத்துக்கும் இருக்கத்தானே செய்யும்!

தீஸ்டா நதிநீர்ப் பங்கீட்டு ஒப்பந்தம் மேற்கு வங்கத்துக்குப் பாதகமாக இருக்கும் என்பதும் இதனால் மேற்கு வங்கத்தின் வடபகுதியில் விவசாயம் பாதிக்கப்படும் என்பதும் முதல்வர் மம்தா பானர்ஜியின் எதிர்ப்புக்கான காரணங்கள். நமது கேள்வி எல்லாம் அவர் ஏன் முதலிலேயே தனது எதிர்ப்பைத் தெரிவித்து அசாம், திரிபுரா, மேகாலயா, மிஜோரம் முதல்வர்களுடன் தானும் பிரதமருடன் வங்கதேசம் போவதாக இருந்த பயணத்தை ரத்து செய்யவில்லை என்பதுதான். பிரதமரை சர்வதேச அளவில் அவமானப்படுத்துவதன் மூலம் முதல்வர் மம்தா பானர்ஜிக்கு என்ன லாபம் என்று தெரியவில்லை. இத்தனைக்கும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் அங்கம் வகிக்கிறது என்பதுதான் அதைவிட ஆச்சரியம்.

சர்வதேச ஒப்பந்தத்தில் மத்திய கூட்டணி அரசில் அங்கம் வகிக்கும் கட்சியைச் சார்ந்த மேற்கு வங்க முதல்வர் சரியோ, தவறோ தனது மாநில உரிமைக்காகக் குரல் கொடுக்கிறார். பிரதமரையே எதிர்க்கத் துணிகிறார். அவமானப்படுத்தப்படுகிறார். அது அரசியல் ஆதாயத்துக்காக என்பதும் நியாயமற்றது என்பதும் வேறு விஷயம். நமக்கும் ஒரு முதல்வர் இருந்தார். அதே ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் அங்கம் வகித்தும், காவிரி, முல்லைப் பெரியாறு பிரச்னைகளைத் தீர்க்கவில்லை. ம்ம்ஹும்...!

No comments:

Post a Comment