Monday, 12 September 2011

நீரினும் நன்று அதன் காப்பு?

இப்போது விவசாயிகள் ஒருவர்பின் ஒருவராக விவசாயத்தைக் கைவிட்டுக்கொண்டிருக்கும் நிலைமை. பலர் பாசனவசதி இருந்தும்கூட வேளாண்மை செய்யாமல் நிலங்களைத் தரிசாக்கும் போக்கு அதிகரித்து வருகிறது. விளைநிலங்கள் குடியிருப்புகளாக மாற்றப்பட்டு வருகின்றன. முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருக்கும் "முதல்வரின் உழவர் பாதுகாப்புத் திட்டம்' இந்தப் பிரச்னைகளுக்கு முழுமையான தீர்வாக அமையாவிட்டாலும் ஓரளவுக்குப் பாதிப்புகளைக் குறைப்பதாக இருக்கும்.

உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் மூலம், விவசாயியின் குடும்பத்தைச் சேர்ந்த அனைவருக்கும் அடையாள அட்டை வழங்குவது என்கிற அறிவிப்பும், கல்வித் உதவித்தொகை, திருமண உதவித்தொகை உள்ளிட்ட சலுகைகளும் தமிழக விவசாயிகளுக்குப் பயனளிக்கும் என்பதோடு, கிராமங்களிலிருந்து விவசாயிகள் வெளியேறும் நிலைமையை ஓரளவுக்குக் கட்டுப்படுத்தும்.

முன்பு அடையாள அட்டை விவசாயக் குடும்பத்தில் குடும்பத் தலைவருக்கு மட்டுமே அளிக்கப்பட்டது. இப்போது அது மாற்றப்பட்டு ஒரு குடும்பத்தில் கணவன், மனைவி இருவரும் விவசாயத்தில் ஈடுபட்டால் அவர்கள் இருவருக்குமே தனித்தனியாக அடையாள அட்டைகள் வழங்க வழிகோலப்பட்டுள்ளது. இதன்மூலம் யாருக்கு இயற்கை மரணம், விபத்து போன்ற பாதிப்பு ஏற்பட்டாலும் நிவாரணம் வழங்கப்படும்.

கிராமப்புறங்களில் பெண்கள்தான் பெரும்பாலும் விவசாய வேலைகள் அனைத்தையும் சிறிது சிறிதாகச் செய்து கொண்டிருக்கிறார்கள். தற்போது அவர்களுக்கும் அடையாள அட்டை கொடுத்திருப்பதன் மூலம், விவசாயப் பெண்களிடையே புதிய உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறார் தமிழக முதல்வர் ஜெயலலிதா.

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் எந்தப் பணி மேற்கொள்ள வேண்டும் என்றும், அத்திட்டம் தேவைதானா என்றும் எந்தவித ஆய்வும் பொறுப்பேற்பும் இல்லாத நிலை இருப்பதால்தான் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது. விவசாயப் பணிகளை மிக அதிகமாகப் பாதித்திருப்பது மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம்தான் என்று எந்த விவசாயியிடம் கேட்டாலும் கண்ணீர்மல்க எடுத்துரைப்பார். பாசன வசதி இருந்தும் பலரும் விவசாயத்தில் ஈடுபடாமல் இருப்பதற்கு மிக முக்கியமான காரணம் வேளாண் பணிகளுக்கு விவசாயத் தொழிலாளர்கள் கிடைக்காமல் இருப்பதுதான்.

ஏரியில் இருக்கும் மண்ணை வெட்டிக் கரையில் போட இரண்டுநாள் வேலை; அதற்குக் கூலி; மறுபடியும் மழையில் அந்த மண் கரைந்து ஏரியில் வண்டலாக நிற்கும். மீண்டும் வாரியெடுத்து கரையில்போட இருநாள் வேலை; அதற்குக் கூலி என்று எந்தப் பொறுப்பும் இல்லாமல் நடைபெறும் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தால் அதிக உழைப்பு இல்லாமல் கூலி கிடைக்கும்போது எப்படி விவசாயப் பணிகளுக்குத் தொழிலாளர்கள் கிடைப்பார்கள். அதுமட்டுமல்லாமல், மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் விவசாயப் பணிகள் நடைபெறாத காலத்தில் மட்டும்தான் நடைமுறைப்படுத்த வேண்டும் என்கிற நிபந்தனை இருந்தாலும்கூட அதை அதிகாரிகள் முறையாகக் கடைப்பிடிப்பது இல்லை என்கிற குற்றச்சாட்டு பரவலாகவே இருக்கிறது. மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் மூலம் மக்களின் வரிப்பணம் விவசாயத் தொழிலாளர்களுக்குக் கிடைக்கிறதோ இல்லையோ சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குப் பயன்படுகிறது என்பதுதான் விவசாயிகளின் மனக்குமுறல்.

உழவர் பாதுகாப்புத் திட்டத்தை மேற்பார்வையிட உயர்நிலைக்குழு ஒன்று அமைக்கப்பட இருக்கிறது. விவசாயக் குடும்பத்தில் குடும்பத் தலைவன், தலைவி இருவருக்கும் மெரூன் வண்ணத்தில் அடையாள அட்டையும், குடும்பத்தின் மற்ற அங்கத்தினர்களுக்கு சாம்பல் நிற அடையாள அட்டையும் வழங்கிவிடுவதுடன் இந்த உயர்நிலைக்குழுவின் பணி முடிந்துவிடாது. இந்த அடையாள அட்டை ஒரு "ஸ்மார்ட் கார்டு'போல, அனைத்து விவரங்களையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். ஒரு விவசாயி அரசு குறிப்பிடும் அளவுக்குள் நிலம் வைத்திருக்கிறார் என்பதோ அல்லது அவர் விவசாயத் தொழிலாளி என்பதோ இத்திட்டத்தில் சேருவதற்கான தகுதியாக இருக்கலாமே தவிர, இது மட்டுமே அவர் சலுகைகளைத் தொடர்ந்து பெறுவதற்கான அனுமதிச் சீட்டாக அமைந்துவிடக்கூடாது என்பதில் அரசு உறுதியாக இருக்க வேண்டும்.

முக்கியமாக ஒரு விவசாயத் தொழிலாளி என்றால் எத்தனை நாள், தனது கிராமத்தில் யார்யாருடைய நிலங்களில் வேலை பார்த்திருக்கிறார் என்கிற தகவலும், சொந்த நிலம் உள்ள விவசாயி என்றால் அவர் என்ன பயிர்களை எந்தெந்த மாதங்களில் சாகுபடி செய்தார் என்ற விவரத்தையும் இந்த "ஸ்மார்ட் கார்டு' மூலம் பதிவு செய்யும் வழக்கத்தை நடைமுறைக்குக் கொண்டு வந்தால் மட்டுமே இத்திட்டம் மிகவும் பயனுள்ளதாக மாறும். இல்லையானால், வெறுமனே அடையாள அட்டை வாங்கிக்கொண்டு, அருகில் இருக்கும் நகருக்குக் கட்டட வேலைக்குப் போவோர் எண்ணிக்கைதான் அதிகரிக்கும்.

அரசின் சலுகைகளைப் பெறும் விவசாயி, தனது நிலத்தில் வேளாண்மை செய்தால், உற்பத்தியின் ஒரு பகுதியை, குறைந்தபட்ச அளவாகிலும் அரசின் வேளாண் விற்பனைக்கூடங்கள் மூலம்தான் விற்றிருக்க வேண்டும் என்ற நிலைமை உருவாதலும், ஒரு விவசாயத் தொழிலாளி ஓராண்டில் குறைந்தபட்சம் இத்தனை நாள் வயலில் வேலை செய்திருந்தால் மட்டுமே சலுகைகள் பெறமுடியும் என்கிற நிபந்தனையும் இருந்தால்மட்டுமே இந்தத் திட்டம் சிறப்பாகச் செயல்படும். அதுமட்டுமல்லாமல், விவசாய நிலங்கள் குடியிருப்புகளாக மாற்றுவதற்கான அனுமதி அண்டை மாநிலமான கேரளத்தில் இருப்பதுபோல கடுமையான சட்டத்தின் மூலம் தடுக்கப்பட வேண்டும்.

தற்போது விவசாயத்தில் ஈடுபடுவோர் தங்கள் குழந்தைகள் விவசாயத்தில் ஈடுபடுவதை விரும்பாத நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலைமை மாறி நகர்ப்புறத்தில் உள்ளவர்கள்கூட விவசாயத்தில் ஈடுபட விரும்பும்வகையில் விவசாயம் லாபகரமானதாகவும் மரியாதைக்குரியதாகவும் மாற்றப்பட்டாக வேண்டும். விவசாயிகள் தங்கள் குழந்தைகளை வேளாண் பட்டம்பெற்று விவசாயத்தில் ஈடுபட ஊக்குவிக்கச் சிறப்புச் சலுகைகள் இந்தத் திட்டத்தில் சேர்க்கப்பட வேண்டும். அப்போதுதான் விவசாயிகளையும், விவசாயத் தொழிலாளர்களையும் கிராமத்தில் தக்கவைப்பதுடன், அவர்கள் தொடர்ந்து வேளாண் தொழிலில் ஈடுபட ஊக்குவிக்கும்.

நன்றி தினமணி

No comments:

Post a Comment