Saturday, 10 September 2011

அமெரிக்காவில் பயங்கரவாதிகள் ஊடுருவல்

நியூயார்க், செப். 9: அமெரிக்காவில் இரட்டை கோபுரம் தாக்குதல் நினைவு தினமான செப்டம்பர் 11-ல் பயங்கரவாதிகள் மீண்டும் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டு உளவுத் துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து அமெரிக்கா முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

2001 செப்டம்பர் 11-ல் நியூயார்க்கில் உலக வர்த்தக மையம் செயல்பட்டு வந்த இரட்டை கோபுரங்களை அல் - காய்தா பயங்கரவாதிகள் விமானங்களால் மோதி தகர்த்தனர். இதில் 3 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர். 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

பழி வாங்க... இதன் பின்னர் அல் - காய்தா பயங்கரவாதிகளுக்கு எதிராக அமெரிக்கா கடும் நடவடிக்கை எடுத்தது. அதன் தலைவர் ஒசாமா பின்லேடன் கடந்த சில மாதங்களுக்கு முன் கொல்லப்பட்டார்.

இந்நிலையில் அவரது கொலைக்கு பழிவாங்கும் நோக்கில் செப்டம்பர் 11-ல் அமெரிக்காவில் மீண்டும் பெரிய அளவில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க உளவுத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

ஆப்கன் பயங்கரவாதிகள்: தாக்குதலை நடத்த ஆப்கானிஸ்தானில் இருந்து 3 பயங்கரவாதிகள் கடந்த மாதமே அமெரிக்காவுக்குள் ஊடுருவியுள்ளனர். அவர்கள் ஈரான் சென்று அங்கிருந்து வான்வழியாக அமெரிக்காவுக்கு வந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது. உளவுத் துறையினருக்கு புதன்கிழமை இந்த தகவல் கிடைத்தது. மிகவும் நம்பிக்கையான தகவல் என்பதால் பயங்கரவாதிகளைப் பிடிக்கவும், அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்கவும் தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதிபருக்கு தகவல்: பயங்கரவாதிகள் ஊடுருவல் குறித்த தகவல் அமெரிக்க அதிபருக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வியாழக்கிழமையன்று அதிகாரிகளுடன் இது தொடர்பாக அவர் ஆலோசனை நடத்தினர்.

ஆண்டுதோறும் செப்டம்பர் 11-ல் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நாடு முழுவதும் நடைபெறும். இந்த நிகழ்ச்சிகளை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

முக்கியமாக ஏற்கெனவே பயங்கரவாதத் தாக்குதலுக்கு உள்ளான நியூயார்க், வாஷிங்டனில் பயங்கரவாத எதிர்ப்புப் படையினர் ஆயுதங்களுடன் குவிக்கப்பட்டுள்ளனர். டிரக் அல்லது கார்களில் வெடிகுண்டுகளை வைத்து தாக்கும் அபாயம் இருப்பதால் தீவிர சோதனைக்குப் பின்னரே வாகனங்கள் நகருக்குள் அனுமதிக்கப்படுகின்றன. பார்க்கிங் பகுதிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

தேவாலயங்கள், அரசு அலுவலகங்கள், பாலங்கள், பெரிய கட்டடங்கள், ரயில், விமான நிலையங்கள் உள்ளிட்டவை போலீஸôரின் பாதுகாப்பின் கீழ் உள்ளன.

காணமல் போன டிரக்: நாடு முழுவதும் தீவிரவாதிகளைத் தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. இதனிடையே முசோரி மாகாணம் கான்சஸ் நகரில் 2 டிரக்குகள் காணாமல் போயுள்ளன. இவை பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டிருந்தால், அதன் மூலம் கூட தாக்குதல் நடத்தலாம் என்பதால் அதனைத் தேடும் பணியும் நடைபெறுகிறது.

ஒபாமா உத்தரவு: செப்டம்பர் 11-ல் மட்டுமின்றி அமெரிக்காவில் இனி பயங்கரவாதிகளால் எவ்வித அசம்பாவிதமும் நிகழாமல் இருக்க இருமடங்கு பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்குமாறு ராணுவம், காவல் துறை உயரதிகாரிகளுக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா உத்தரவிட்டுள்ளார்.

ஏற்கெனவே பொருளாதார சீர்குலைவு உள்ளிட்டவை விவகாரங்கள் அரசுக்கு நெருக்கடி அளித்து வரும் நிலையில், பயங்கரவாதிகளால் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் அரசுக்கு கெட்டபெயர் ஏற்பட்டு விடும் என்பதால் ஒபாமா இந்த விஷயத்தில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்.

நன்றி தினமணி

No comments:

Post a Comment