Wednesday, 7 September 2011

பணமும் பதவியும்


உத்தரப் பிரதேச மாநில முதல்வர் மாயாவதி, விக்கி லீக் தலைவர் அசாஞ்சே ஒரு பொய்யர் என்று கடுமையாக விமர்சித்துக் கொண்டிருந்த அதே நாளில், விக்கி லீக் வெளியிட்ட இணையதள விவரங்களின் அடிப்படையில் அந்த மாநிலத்தின் சமாஜ்வாதி கட்சியின் முன்னாள் செயலர் அமர்சிங் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த விவகாரத்தில் அமர்சிங் மட்டும்தான் பின்னணியில் இருந்தாரா என்கிற கேள்வியை எல்லா அரசியல் கட்சிகளும் எழுப்பியுள்ளன. நடந்த நாடகங்கள் அனைத்தையும் நிதானமாக ஒரு மீள்பார்வைக்கு உள்படுத்தினால், இந்தக் குற்றத்தைச் செய்தவர்களில் அவரும் ஒருவர் அவ்வளவே, என்பது தெரியும். அப்படியானால், பின்னணியில் செயல்பட்ட வேறு சிலர் யார் என்கிற கேள்விக்கான விடை கிடைக்குமா என்பது என்னவோ சந்தேகமாகத்தான் இருக்கிறது.

எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் அரசுக்குப் போதுமான வாக்குகள் கிடைத்து, ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு லஞ்சம் கொடுத்ததாக 2011 மார்ச் 16-ல் விக்கி லீக் மூலமாக வெளியான தகவல்கள், மீண்டும் இந்த வழக்கில் புதிய திருப்புமுனையை ஏற்படுத்தி காவல்துறை மீதான நெருக்கடிகளுக்கு காரணமாக அமைந்தது. விக்கி லீக் தகவல்கள் இல்லாமல் போயிருந்தால் இந்த விவகாரம் முற்றிலுமாக மறக்கப்பட்டிருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

விக்கி லீக் விவகாரம் பத்திரிகைகளில் வெளியான பிறகுதான், உச்ச நீதிமன்றம் இந்த வழக்கில் போலீஸ் மெத்தனமாகச் செயல்படுகிறது என்று தில்லி காவல்துறையைச் சாடியது. அதன் பிறகுதான் சிலர் கைது செய்யப்பட்டனர். மீண்டும் நீதிமன்றம் ஓர் உலுக்கு உலுக்கவே, வேறு வழியின்றி அமர்சிங் கைது செய்யப்பட்டுள்ளார்.

÷இப்போது கைது செய்யப்பட்டுள்ள அமர்சிங், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு லஞ்சம் கொடுத்தது தொடர்பாக விசாரிக்க அன்றைய மக்களவைத் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜியால் அமைக்கப்பட்ட மக்களவைக் குழுவால் குற்றமற்றவர் என்று அறிவிக்கப்பட்டவர். அவர் மட்டுமல்ல, காங்கிரஸ் கட்சித் தலைவி சோனியா காந்தியின் தனிச்செயலர் அகமது படேலும் குற்றமற்றவர் என்று அறிவிக்கப்பட்டது. இதை அறிவித்தது கிஷோர் சந்திர தேவ் தலைமையிலான 7 பேர் கொண்ட மக்களவைக் குழு. இப்போது அமர்சிங் கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால், சோனியா காந்தியின் தனிச் செயலர் மீது மட்டும் நடவடிக்கை இல்லையே ஏன்?

அமெரிக்காவுடன் அணு ஒப்பந்தம் போடுவதில் கருத்து மாறுபாடு கொண்ட இடதுசாரிக் கட்சிகள், ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக்கொண்டு நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்த நேரத்தில், 2008 ஜூலை 22-ம் தேதி, தனது பலத்தை நாடாளுமன்றத்தில் நிரூபிக்க வேண்டிய கட்டாயம் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு ஏற்பட்டது. கம்யூனிஸ்ட் கட்சிகள் தங்கள் ஆதரவை விலக்கிக் கொள்வதாக அறிவித்ததைத் தொடர்ந்து, அதாவது ஜூலை 9-ம் தேதி, சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவும், பொதுச் செயலர் அமர்சிங்கும் தங்கள் கட்சியின் 39 எம்.பி.க்களும் மத்திய அரசுக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பார்கள் என்று அறிவித்தனர்.

முலாயம் சிங் யாதவ், அண்மையில் 2ஜி விவகாரத்தில், திமுக மத்திய அரசிலிருந்து தங்கள் அமைச்சர்களை பதவி விலகச்செய்த நேரத்தில், ஆட்சி கவிழுமோ என்று பரபரப்பு ஏற்பட்ட நேரத்தில், காங்கிரஸýக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தார். ஒருவேளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படும் நிலைமை ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் இரண்டாம்கட்ட ஆட்சிக் காலத்திலும் நேர்ந்திருக்குமேயானால், இதே பண பலம் களமிறக்கப்பட்டிருக்கும் என்பதில் சந்தேகமேயில்லை.

÷இந்த விவகாரத்தில், முலாயம் சிங் யாதவுக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்று சொல்வதற்கில்லை. ஒருவேளை, மேலும் தீவிரமான விசாரணைகள் நடைபெற்றால், அவர் மீதும் குற்றம் இருப்பது தெரியவரலாம்.

÷அடுத்த கேள்வி, இவர்களுக்குப் பணம் கொடுத்தவர்கள் யார்? குதிரை பேரத்துக்காகத்தான் கட்சிகள் திடீர் திடீர் என்று ஆதரவு தெரிவிக்கின்றன. விலக்கிக் கொள்ளவும் செய்கின்றன. யாரும் கொள்கை ரீதியில் ஆதரவு அல்லது எதிர்ப்புத் தெரிவிப்பதில்லை என்பது அரசியல் உலகில் எழுதப்படாத விதியாகிவிட்டது. ஆகவே, இவர்களுக்குப் பணம் கொடுத்து உதவிய நபர் யார் அல்லது கட்சி எது?

இந்தக் கைதுகளும்கூட நீதிமன்றத்துக்காக நடத்தப்படும் நாடகமோ என்றே எண்ணத் தோன்றுகிறது. ஏனென்றால், இதற்கு மூலகாரணமான பயனாளி யார் என்றால், அது இன்றைய ஆளும் காங்கிரஸ் கட்சிதான். அவர்கள் தங்களைத் தாங்களே குற்றவாளியாக அறிவிப்பார்களா? பாரபட்சமற்ற விசாரணை நடத்துவது என்று சொன்னால், முதலில் விசாரிக்கப்பட வேண்டியவர் பிரதமர் மன்மோகன் சிங்தான். நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோல்வி அடைந்ததால்தான் அவரால் பிரதமராகத் தொடர முடிந்தது.

நாடாளுமன்றத்தில் கேள்விகளை எழுப்பப் பணம் தரப்படுகிறது என்று குற்றச்சாட்டு எழுந்தது. விசாரணை நடைபெற்றது. இப்போதும் கேள்விகளுக்குப் பணம் தரப்படுவது முற்றிலுமாகத் தடுக்கப்பட்டு விட்டதா என்று யாருக்காவது தெரியுமா? ஆட்சிக்கு ஆதரவு அளிக்கப் பணம் தரப்பட்டது என்கிற குற்றச்சாட்டும் அதுபோல நிரூபிக்க முடியாமல் நீர்த்துப்போகக்கூடும். நாடாளுமன்றத்தில் நடந்த விவகாரத்தில் நீதிமன்றம் எப்படித் தலையிடப் போயிற்று என்று அரசியல் சட்டச் சிக்கலை உருவாக்கித் தப்பித்துக் கொண்டால்கூட ஆச்சரியப்படுவதற்கில்லை.

அமர்சிங் இப்போது யாருக்கும் வேண்டாதவர். மாட்டிக் கொண்டிருக்கிறார். அகமது படேல் போன்றவர்கள் அதிகாரமையத்துக்கு வேண்டியவர்கள். மாட்டிக்கொள்ள மாட்டார்கள். ஒன்று மட்டும் தெரிகிறது. நாடாளுமன்றத்தில் நடைபெறும் சம்பவங்கள் மக்களுக்கு அரசின்மீதும், ஏன், ஜனநாயகத்தின் மீதே நம்பிக்கை ஏற்படுத்துவதாக இல்லை.

No comments:

Post a Comment