Wednesday, 7 September 2011

லஞ்சம் வாங்குவதற்காக தனி அலுவலகம்

லஞ்சம் வாங்குவதற்காக தனி அலுவலகம்: பணத்தை வாங்கும் பெண் ஊழியருடன் சென்னையில் மத்திய அரசு ஊழியர் கைது
கம்பெனிகளின் பெயரை பதிவு செய்யும் பதிவாளர் அலுவலகம் சென்னை சாஸ்திரி பவனில் செயல்படுகிறது. இது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த பதிவாளர் அலுவலகத்தில் தொழில் நுட்ப ஊழியராக பணிபுரியும் கோட்டீஸ்வரன் (வயது 50) என்பவர் மீது சி.பி.ஐ போலீசில் ஏராளமான புகார்கள் கூறப்பட்டது.

மனித உரிமை அசோசியேசன் என்ற பெயரில் தொண்டு நிறுவனம் ஒன்றை பதிவு செய்வதற்காக, பதிவாளர் அலுவலகத்தை அணுகிய போது, ஊழியர் கோட்டீஸ்வரன் ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்பதாக சி.பி.ஐ. போலீசாருக்கு புகார் வந்தது.

சி.பி.ஐ. போலீசார் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். லஞ்சபணத்தை வாங்குவதற்காக ஊழியர் கோட்டீஸ்வரன் ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் ரோட்டில் ஒரு தனி அலுவலகமே நடத்தி வந்தாராம். அங்கு லஞ்ச பணத்தை வாங்குவதற்காக ஜெயராணி (40) என்ற பெண்ணையும், கோட்டீஸ்வரன் வேலைக்கு வைத்திருந்தாராம்.

பதிவு செய்ய வருபவர்களை கோட்டீஸ்வரன் முதலில் தனது அலுவலகத்துக்கு அனுப்பி லஞ்ச பணத்தை கொடுக்க சொல்வாராம். பணத்தை கொடுத்த பிறகுதான் வேலை நடக்குமாம். நேற்றும் (06.09.2011) அது போல் ரூ.10 ஆயிரம் லஞ்ச பணத்தை வாங்கியபோது, கோட்டீஸ்வரன் கைது செய்யப்பட்டார். அவரிடம் வேலை பார்த்த பெண் ஜெயராணியும் கைதானார். இருவரும் சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற காவலில் புழல் மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

No comments:

Post a Comment