Wednesday, 7 September 2011

வீடுகள் மண்ணில் புதையும் மர்மம்

கோவை: உக்கடத்தில் 75 கோடி ரூபாய் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்டுள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு மண்ணில் புதைந்து வருவதால் பயனாளிகள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பில் அம்மன் குளம் பகுதியில் கட்டப்பட்ட அடுக்குமாடி வீடுகளில் ஒரு கட்டடம் மண்ணில் புதைந்தது. இதையடுத்து நவீன தொழில் நுட்ப உத்திகளை பயன்படுத்தி அக்கட்டடம் தற்போது சீரமைக்கப்பட்டு வருகிறது. அதே பகுதியில் கட்டப்பட்ட இரு கட்டடங்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன. தமிழகம் முழுவதும் இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், உக்கடம் கழிவு நீர் பண்ணையில் கட்டி முடிக்கப்பட்டுள்ள அடுக்குமாடி வீடுகளில் ஒரு கட்டடம் 15 செ.மீ., மண்ணில் புதைந்துள்ளது. ஏழை மக்கள் குடியேற வீட்டு வசதி வாரியம் சார்பில் ரூ.75 கோடி மதிப்பில் இங்கு மொத்தம் 3,024 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. ஒரு கட்டடத்தில் 144 வீடுகள் வீதம் மொத்தம் 21 கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. கடந்த ஒரு வாரமாக கோவையில் பெய்து வந்த தொடர் மழை காரணமாக கட்டடம் மண்ணில் புதைந்திருக்கலாம் என கருதப்படுகிறது. கட்டடங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ள இடம், அதிக பளுவை தாங்கும் சக்தி இல்லாத இலகுவான மண் கொண்ட பகுதியாக இருப்பதும் காரணமாக சுட்டிக் காட்டப்படுகிறது. இக்கட்டடத்தை தொடர்ந்து, இதன் அருகில் உள்ள பிற கட்டடங்களும் மண்ணில் புதையும் அபாயம் உள்ளது. தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு இந்த வாரம் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்படவிருந்த நிலையில், திடீரென அவை மண்ணில் புதைந்து வருவது பொதுமக்களை பீதிக்குள்ளாக்கியுள்ளது. அமைச்சரின் ஆய்வுக்குப் பின்னரே வீடுகள் ஒதுக்கப்படுமா அல்லது அம்மன் குளம் வீடுகளைப் போல் இடித்துத் தள்ளப்படுமா என்பது தெரிய வரும்.

தினமலர்

No comments:

Post a Comment