Friday, 16 September 2011

ஹாக்கி இந்தியாவின் தேசிய விளையாட்டா?

பாகிஸ்தான் ஹாக்கி அணியை 4-2 கோல் கணக்கில் வென்று, ஆசிய சாம்பியன் கோப்பையைப் பெற்று வந்திருக்கும் இந்திய ஹாக்கி வீரர்களுக்கு, பரிசுத் தொகை தலா ரூ.25,000-ஐ ""ஹாக்கி இந்தியா'' வழங்கியதை அணியின் வீரர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக ஏற்க மறுத்துவிட்டனர். 


ஹாக்கி வீரர்கள் எடுத்த இந்தச் சரியான முடிவைத் "தினமணி' முழுமனதுடன் வழிமொழிகிறது.இந்தச் செய்தி எல்லா பத்திரிகைகளிலும் வெளியான பிறகு, விளையாட்டுத் துறை அமைச்சர் விழிப்படைந்துவிட்டார். 

அரசு இந்த வீரர்களுக்கு தலா ரூ.1.5 லட்சம் வழங்கும் என்கிறார். கோடீஸ்வரர் வீட்டில் கீரைக் குழம்பு சோறு போட்டதைப்போல, இதில் என்ன கஞ்சத்தனம்? இதுவே இந்திய கிரிக்கெட் அணி, பாகிஸ்தான் அணியை எதிர்த்து விளையாடி வெற்றிபெறுவது, சாதாரண கிரிக்கெட் போட்டியாக இருந்தாலும்கூட, இந்தியாவில் ஊடகங்களிலும், பத்திரிகைகளிலும் எவ்வாறு கொண்டாடப்பட்டிருக்கும் என்பதையும், இவர்களுக்குப் பரிசுகள், பாராட்டுகள் எப்படிக் குவிந்திருக்கும் என்பதையும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

கிரிக்கெட்டில் உலகக் கோப்பை-2011ஐ வென்றதற்காக இந்திய அணியின் வீரர்களுக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அளித்த தொகை ஒவ்வொரு வீரருக்கும் ரூ.2 கோடி. புது தில்லி முதல்வர் ஷீலா தீட்சித், மேலும் ஒரு கோடி ரூபாயை தில்லி வீரர்களான கௌதம் காம்பீர், வீரேந்திர சேவாக், ஆசிஷ் நெஹ்ரா, விராட் கோலி ஆகிய வீரர்களுக்கு அளித்ததுடன், அணித் தலைவர் தோனிக்குத் தனியாக இன்னொரு ரூ.2 கோடியை அளித்துக் கௌரவித்தார். சச்சின் டெண்டுல்கருக்கு மகாராஷ்டிர அரசு, ஒரு கோடி ரூபாய் அறிவித்தது. ஹர்பஜன் சிங், யுவராஜ் சிங் இருவருக்கும் பஞ்சாப் மாநில அரசு தலா ரூ.1 கோடி அளித்தது. உத்தரகண்ட் மாநில முதல்வரோ, சச்சினுக்கும், தோனிக்கும் முசோரி மலைவாசஸ்தலத்தில் வீட்டுமனை ஒதுக்கினார். ஒவ்வொரு வீரரும் குறைந்தது ரூ. 5 கோடி பெற்றார்கள்.

அது உலகக் கோப்பை. இப்போது ஹாக்கி வீரர்கள் வென்றிருப்பது வெறும் ஆசியக் கோப்பைதானே என்று சொல்லக்கூடும். ஆனாலும், பாகிஸ்தானின் மிகவும் பலமான ஹாக்கி அணியை வென்றிருப்பதன் மூலம் மீண்டும் உலக அரங்கில் இந்திய ஹாக்கி அணி முக்கிய இடத்தைப் பெறும் நிலை உருவாகியிருப்பதைப் புரிந்துகொண்டு, இப்போது இவர்களைப் பாராட்டினால்தானே இந்த வீரர்கள் மேலும் ஊக்கம் பெறுவார்கள். 

ஹாக்கி விளையாட்டில் சிறந்து விளங்கினாலும் மதிப்பும், மரியாதையும், பரிசும், பணமும் கிடைக்கும் என்று தெரியவந்தால்தானே புத்தம்புது இளைஞர் கூட்டம் மீண்டும் ஹாக்கி விளையாடத் தொடங்கும்.இந்தியாவின் தேசிய விளையாட்டு ஹாக்கிதான் என்பதையே பலரும் மறந்தாகிவிட்டது. 

உலக அரங்கில் இந்தியாவுக்குப் பெருமை தேடித்தந்த முதல் விளையாட்டு, ஹாக்கிதான். தயான்சந்த் சிங் தலைமையில் 1928-ல் ஆர்ம்ஸ்டர்டாம், 1932-ல் லாஸ் ஏஞ்சலிஸ், 1936-ல் பெர்லின் ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவுக்குத் தங்கப்பதக்கத்தை முதன்முதலில் தேடித்தந்த விளையாட்டு ஹாக்கிதான் என்பதையும் நாம் மறந்தே போய்விட்டோம்.கிரிக்கெட்டின் ஆதிக்கத்தால் ஹாக்கி விளையாட்டு மெல்லமெல்லப் பின்னுக்குத் தள்ளப்பட்டது. 

1980-ல் ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற பின்னர்தான், மீண்டும் ஹாக்கி விளையாட்டு எல்லோராலும் பரவலாகப் பேசப்பட்டது. தனியார் தொலைக்காட்சிகள் எண்ணிக்கை பெருகத் தொடங்கிய பிறகு, அவர்கள் கிரிக்கெட் போட்டிகளுக்கு மட்டுமே முன்னுரிமை அளித்தார்கள். இதனால் ஹாக்கி, கால்பந்து போன்ற விளையாட்டுகள் மீண்டும் பின்னுக்குத் தள்ளப்பட்டன.ஒரு கண்ணில் வெண்ணெய், ஒரு கண்ணில் சுண்ணாம்பு என்பதைப்போல, அரசும் கார்ப்பரேட் நிறுவனங்களும் கிரிக்கெட் என்றால் அதிக முக்கியத்துவம் தருகின்றன. அடுத்தபடியாக செஸ், பாட்மிண்டன், டென்னிஸ் சமீபகாலமாக கோல்ஃப், பில்லியட்ஸ் என்றுதான் கவனம் செலுத்தப்படுகிறது. 

மற்றபடி ஹாக்கி, கால்பந்து என்றால் ஆதரிக்கத் தயாராக இல்லை. இதனால் கிராமங்களில் இருந்த வாலிபால், கால்பந்து, கபடி போன்ற விளையாட்டுகள் இல்லாமல் போய்விட்டன.இந்திய ஹாக்கி அணி 1980 ஒலிம்பிக்கில் தங்கம் வென்றபோது, அந்த அணியில் இருந்த எம்.எம். சோமையா தற்போதைய வெற்றியைப் பாராட்டி, வீரர்களுக்கு அதிகத் தொகை வழங்கிப் பாராட்ட வேண்டும் என்று வலியுறுத்தியதோடு, இன்னொரு உண்மையையும் மத்திய விளையாட்டு அமைச்சகத்தின் கவனத்துக்குக் கொண்டு வந்திருக்கிறார். ""ஆசிய அணிகளுடன் நாம் தன்னம்பிக்கையுடன் விளையாடுகிறோம். ஆனால், இதே தன்னம்பிக்கை ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய நாடுகளுடன் விளையாடும்போது இருப்பதில்லை. 

சென்னையில் 2007-ல் ஆசிய கோப்பையை இந்தியா வென்றது. ஆனால், பெய்ஜிங் ஒலிம்பிக்கில் (2008) தகுதிகூடப் பெற முடியவில்லை. அப்படி மீண்டும் நிகழாமல் இருப்பது இந்த வெற்றியை இந்திய அரசு எவ்வாறு முன்னெடுத்துச் செல்கிறது என்பதைப் பொறுத்து இருக்கிறது'' என்கிறது அவரது எச்சரிக்கை.விபத்தில் இறந்தாலும், துப்பாக்கிச் சூட்டில் பலியானாலும்கூட இறந்தவர் குடும்பத்துக்கு ரூ,5 லட்சம் என்று கருணைத்தொகை உயர்ந்துவிட்ட இன்றைய காலகட்டத்தில், ஓர் ஆசிய அளவிலான வெற்றியைக் கொண்டாட, ஊக்கப்படுத்த, எத்தகைய பரிசுத் தொகை அளிக்க வேண்டும் என்பதுகூடத் தெரியாதவர்களின் கையில் விளையாட்டுத் துறை இருக்கிறது என்பதைத்தான் அரசின் முடிவு வெளிச்சம் போடுகிறது.

அரசு பாராட்டாவிட்டாலும், பரிசுத் தொகை தராவிட்டாலும் என்ன? "தினமணி' வாசகர்களின் சார்பில் நாம் இந்திய ஹாக்கி அணியினருக்கு நமது பாராட்டைப் பதிவு செய்கிறோம். வெல்க... வளர்க... என்று வாழ்த்தி மகிழ்கிறோம்!

நன்றி  தினமணி

No comments:

Post a Comment