Friday, 2 September 2011

அண்ணா ஹசாரே இயக்கத்தினால் பலனடையப் போவது யார்?

அண்ணா ஹசாரே என்ற தனி மனித போராட்டம் இன்று இயக்கமாகவே மாறி வருகிறது. ஒரு வருடத்துக்கு முன்பாக, அண்ணா ஹசாரே யார்
1என்று டெல்லியிலோ… கொல்கத்தாவிலோ… ஐதராபாத்திலோ… சென்னையிலோ… கொச்சினிலோ கேட்டிருந்தால்… தெரியாது என்றுதான் பதில் வந்திருக்கும். அல்லது அவர் ஒரு சமூக சேவகர் என்ற பதிலை ஒருவரோ அல்லது இரண்டு பேரோ தெரிவித்திருக்கலாம். மற்றவர்களுக்கு நிச்சயமாக தெரிந்திருக்க வாய்ப்பேயில்லை.
ஆனால், இன்று அவரைத் தெரியாவதன் இந்தியனாக இருக்க முடியாது என்று சொல்லும் அளவுக்கு உயர்ந்து நிற்கிறார்.
அவரும் ஊழல்வாதி என்று சித்தரிக்க முயற்சித்து தோற்றுப்போனது காங்கிரஸ். இதுவரை அவரது செயல்பாட்டில், குறைகளையும் அறக்கட்டளை பணத்தில் இரண்டு லட்சத்தை எடுத்துவிட்டார் என்றும் குற்றஞ்சாட்டி வந்த காங்கிரஸ் இன்று மண்டிப்போட்டு மன்னிப்பு கேட்டிருக்கிறது.
அண்ணாவை அவமரியாதையாக பேசியதற்காக, காங்கிரஸின் செய்தித் தொடர்பாளர் மனீஷ் திவாரி பகிரங்க மன்னிப்பு கேட்டிருக்கிறார்.
ஏன் இவர் போராடுகிறார்? எதற்காக போராடுகிறார் என்று தெரியாமலே வெளிநாட்டு சதியில் ஹசாரே சிக்கிக் கொண்டதாக காங்கிரஸ்
குற்றஞ்சாட்டியது.
அரசு அதிகாரிகளையும் அமைச்சர்களையும் கட்டுப்படுத்தும் லோக்பால் சட்டம் இன்னும் வலுவானதாக இருக்க வேண்டும் என்றுதான் போராடுகிறார் அண்ணா ஹசாரே. இதில் தவறேயில்லை. அச்சட்டத்தில் பிரதமர் வர வேண்டும் என்கிறார். நீதிபதிகளை கொண்டு வர வேண்டும் என்கிறார். இது தவறா?
இதற்கு ஏன் முட்டுக்கட்டை போடுகிறது காங்கிரஸ்.
பாராளுமன்ற அமைப்பு இருக்கும் போது, தனி மனித அபிலாஷைகளுக்கு, அடிபணியக்கூடாது என்ற கொள்கையா? இல்லை.2
சட்டமன்ற, நாடாளுமன்ற அமைப்புகள் இருக்கும் போது, சட்டம் இயற்றுவதற்கு கெடு விதிப்பது தொடர்ந்தால், நாளை இந்த அமைப்புகளுக்கு மரியாதை போய்விடும் என்பதாலா… இல்லை!
வேறு என்ன… அதாவது ஹசாரேவை யார் இயக்குவது என்பதை கண்டுபிடிக்கவே காங்கிரஸ் ஆசைப்படுகிறது.
ஹசாரே ஊரகப் பகுதிகளில் நடக்கும் அவலங்களை எதிர்த்து, போராடி தேசிய விருதுகளை வாங்கியிருக்கிறார். இது 1994ம் ஆண்டில் நடந்தவை. இவருக்கு அந்த மகாராஷ்டிராவை கடந்து இழுத்து வந்து டெல்லியில் அமர்த்திய சக்திகள் யார்?
அவர்களின் நோக்கம் என்ன? இது காங்கிரஸூக்கு மட்டுமல்ல… பல அரசியல் தலைவர்களுக்கும் இந்த சந்தேகம் இருக்கிறது.
மகாத்மா காந்தி என்ற தனி நபர் தான், சுதந்திரத்துக்கு முந்தைய காங்கிரஸின் அடையாளமாக இருந்தார். அவரது செயல்பாடு காந்தியன் மூவ்மெண்ட் என்றே அழைக்கப்பட்டது. அதாவது காந்தி இயக்கம் தொடர்ந்து அகிம்சை முறையில் போராடி, உயிர்த்தியாகம் செய்து, உலகத்தையே அதிசயக்க வைத்தது.
காந்திய இயக்கத்தின் போராட்டத்தில் பலனடைந்தது யார்? காங்கிரஸ் கட்சி.
ஆம். காந்திய இயக்கத்தின் மூலம் காங்கிரஸ் கட்சி, இந்த நாட்டில் ஆட்சி அமைத்து, அதன் தலைவர்கள் எப்படியெல்லாம் நடந்துக் கொண்டார்கள் என்பது நாடறியும்.
3அடுத்து, ஜெயப்பிரகாஷ் நாராயணன் இயக்கம்.
காங்கிரசை எதிர்த்து ஜெயப்பிரகாஷ் நாராயணன் என்ற போராளி போராடிய இயக்கத்தின் பலனை அடைந்தது ஜனதா என்ற கட்சி.
அந்த ஜனதா கட்சி, ஏதோ மூன்று ஆண்டு ஆட்சியில் இருந்ததோடு சரி.
அடுத்து அயோத்தி இயக்கம்.
இந்த அயோத்தி இயக்கத்தின் பலனை பாரதிய ஜனதா கட்சி அடைந்தது. ஆம்… இந்தியா முழுவதும் ராமர் கோவில் இருக்கும் அயோத்தி யாருக்குச் சொந்தம் என்று கிளம்பிய புயலால், 1999ம் ஆண்டு, ஆட்சிக்கு வந்தது பாரதிய ஜனதா கட்சி.
இன்று இப்போது அண்ணா ஹசாரே இயக்கம்.
இது எப்படி தோன்றியது… ஏன் இப்படி விஸ்வரூபம் எடுத்திருக்கிறது… இவரால் ஊழல் ஒழிந்துவிடுமா? இன்னும் கொஞ்ச நாளில் இந்தியாவில் ஊழல் என்ற வார்த்தைக்கே இடமிருக்காதா என்றெல்லாம் விவாதங்கள் போய்க் கொண்டிருக்கின்றன.
சரி… இந்த அண்ணா ஹசாரே இயக்கதின் பலனை அடையப்போவது யார்?
ஹசாரேவை காங்கிரஸ் மட்டும் எதிர்க்கிறது என்ற எண்ணம் இந்தியா முழுவதும் பரவி இருக்கிறது.
ஹசாரேவை, பாரதிய ஜனதா கட்சி இயக்குகிறதோ என்ற சந்தேகம் இருக்கிறது. ஆனால், அவர்களும் நேற்று நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் இரட்டை நாடகம் ஆடியது அம்பலமாகி இருக்கிறது.
வரும் ஆகஸ்டு 30ம் தேதிக்குள், ஜன் லோக்பால் சட்ட மசோதா இறுதி செய்யப்பட வேண்டும் என்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பாரதிய ஜனதா கூட வற்புறுத்தவில்லை. நாடாளுமன்றம்தான் சட்டம் இயற்றக்கூடிய அதிகாரம் கொண்டது. இதில் மற்றவர்கள் தலையிடுவதை அனுமதிக்க முடியாது என்றுதான் பாரதிய ஜனதா ஒத்து ஊதிவிட்டு வந்திருக்கிறது. உண்மையிலே ஹசாரே மீது நம்பிக்கை வைத்திருந்தால் பாரதிய ஜனதா கட்சி, அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ஓரு முடிவு எட்டும் வரை போராடி இருக்கலாமே. ஏன் அப்படி நடந்துக் கொள்ளவில்லை.
சரி… வேறு எந்த கட்சிகள் ஹசாரேவை இயக்குகிறது. கம்யூனிஸ்ட் கட்சிகளா என்று பார்த்தால் இல்லை. அவர்களும் ஹசாரேவை ஆதரிப்பது4 போல சொல்லிக் கொண்டே, அதெல்லாம் முடியாது. சட்டம் இயற்றுவதை நாடாளுமன்றத்தில் பார்த்துக் கொள்ளலாம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால், ஹசாரேவை கைது செய்ததை கண்டித்து பாரதிய ஜனதாவும், கம்யூனிஸ்ட் கட்சிகளும் இன்ன பிற கட்சிகளும் போராடின. அவருக்காக குரல் கொடுத்து, காங்கிரஸை நிலை குலையச் செய்தன.
அண்ணா ஹசாரேவை பாரதிய ஜனதாவும் ஆதரிக்கவில்லை.
கம்யூனிஸ்ட் கட்சிகள் அல்லது மூன்றாவது அணி அமைக்கலாம் என்ற கருத்துக் கூட்டணியில் இருக்கும் கட்சிகளும் ஆதரிக்கவில்லை.
காங்கிரஸ் மட்டும் ஹசாரேவை எதிர்த்து, மற்ற கட்சிகள் அவரை ஆதரித்திருந்தால், அன்று நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ஓர் நல்ல முடிவை எட்டியிருக்கலாமே?
அப்படியென்றால், அண்ணா ஹசாரேவை யார் இயக்குவது? அதில் பலனடையப் போககிறவர்கள் யார்?
இந்தியாவில் இருக்கும் கட்சிகள் எல்லாம் இல்லை என்றால், காங்கிரஸ் சொல்வது போல வெளிநாட்டு சக்தியா?
அட… எந்த மண்ணாங்கட்டியாக இருந்தாலும் சரி… ஊழலை ஒழிக்க வேண்டும் அல்லது ஊழலை தடுக்க கடும் சட்டம் வேண்டும் என்று கிளம்பி இருக்கும் அண்ணா ஹசாரேவுக்காக, இந்தியா முழுவதும் மக்கள் இயக்கம் போல கிளம்பிக் கொண்டிருக்கிறார்கள்.
“சட்டம் இயற்றுவதற்காகத்தான், நாங்கள் தேர்தலில் நின்று ஜெயித்து இங்கே வந்திருக்கிறோம். பிறகு, யாரோ ஒரு தாத்தா சொன்னால் நாங்கள் கேட்பதா?’ என்று கூச்சலிடும் அரசியல்வாதிகளுக்கு ஒரே ஒரு தகவல்.
உங்களுக்கு ஓட்டுப் போட்டு, உங்களை டெல்லிக்கு கொண்டு போய் உட்கார வைத்த மக்கள் சக்தி தான் இன்று அண்ணா ஹசாரே இயக்கத்தை இயக்கிக் கொண்டிருக்கிறது. அந்த அண்ணாவுக்கு மக்கள் ஆதரவு அலை அலையாய் ஒவ்வொரு மாநிலத்திலும் பெருகிக் கொண்டிருக்கிறது. அதை புரிந்துக் கொள்ளும் சக்தி கூடவா உங்களுக்கு இல்லை.
அண்ணா ஹசாரேவின் குரல் எல்லா பத்திரிகைகளிலும் எல்லா டிவியிலும் வருவதை பார்த்ததும் என்ன செய்வது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கும் அரசியல்வாதிகள் கூட்டத்துக்கு வேட்டு வைக்கும் மக்கள் தான், இந்த அண்ணா ஹசாரே இயக்கத்தின் மூலம் பலனைடையப் போகிறார்கள்.
ஆம். அச்சட்டம் வந்து ஊழல் ஒரு பத்து சதவிகிதம் குறைந்தாலும், அது மக்களுக்கு கிடைத்த வெற்றிதான். அச்சட்டத்தை கொண்டு வந்தால், அரசியல்வாதிகள் அரசியலில் இருக்கலாம். அச்சட்டத்தை நீங்கள் நிராகரிக்கத்தொடங்கினால், அண்ணா ஹசாரே அரசியல்வாதியாகிவிடுவார். எச்சரிக்கை. எச்சரிக்கை.
அவர் கட்சி தொடங்கினால், எல்லா கட்சிகளுக்கும் பஞ்சம் வந்துவிடும். ஜாக்கிரதை… ஜாக்கிரதை!

No comments:

Post a Comment