Saturday, 3 September 2011

சொல்வதெல்லாம் உண்மை பாகம் 15

காசு, பணம் சேர்ந்துவிட்டால் கரப்பான் பூச்சியும் காலாட்டிக்கிட்டு அதிகாரம் பண்ணும் என்பதைப் போல இவருக்கு காசு பணம் மட்டுமில்லை அதிர்ஷ்டக் குலுக்கலில் அதிகாரமும் கிடைத்துவிட்டது. அதுவரை பக்கிரியாக சுற்றித் திரிந்தவர் ஆண்டவனாக அவதாரம் எடுத்துவிட்டார். அதோடு ஆண்டவனின் தொழிலாகிய ஆக்கல், காத்தல், அழித்தல் ஆகிய தொழில்களையும் கையில் எடுத்துக்கொண்டார். எல்லா வேலைகளிலும் பணத்தை ஆக்குவது, ஆக்கிய பணத்தை காப்பது, கட்சியையும், கட்சிக்காரர்க¬ ளயும் அழிப்பது இவைகளைத்தான் இவர் தொழிலாய் செய்து வந்தார். சென்னைக்கு மேலுள்ள மாவட்டத்தில் இவர் செய்யாத வேலையே இல்லை என்று கூறலாம்.
06
ஐம்பது வயதை நெருங்கிக்கொண்டி ருக்கும் இவருக்கு கடந்த ஐந்து வருடங்கள் தான் பொற்காலம். தனக்கு மட்டுமின்றி தன் தம்பிகளுக்கும் தனித்தனியாக ராஷாங்கம் அமைத்துக் கொடுத்திருந்தார். இவர்களின் ராஜ்ஜியத்தில் கடற்படைதான் மிகவும் பலமாக விளங்கியது.

எதிரிகளை ஏற்றிக்கொண்டு கட்டுமரம் கடலுக்குள் போய்விட்டால் அவர்களின் கதி என்னவானதென்று காவல்துறையால்கூட கணித்துக் கூற முடியாது.

ஐந்து வருடத்தில் எல்லாமே தலைகீழ். தேர்தல் முடிந்ததும் தலைமறைவான தம்பிகள் இப்போது போலீஸ் பிடியில். தானும் எப்போது வேண்டுமானாலும் வேனில் ஏற்றப்படலாம் என்ற எதிர்பார்ப்பில் கலங்கிப் போயிருக்கிறார். அவரின் மனசாட்சியுடன் பேச்சுக் கொடுத்தோம். அவரின் வாக்குமூலம்...

மின்சாரம்கூட இல்லாத ஒரு சின்ன வீட்டில் பிறந்த நான் என் தம்பியை அந்த வாரியத்திற்கே உறுப்பினராக்கினேன் என்றால் என் வளர்ச்சியைப் பார்த்து வாயடைத்துப் போனவர்கள்தான் அதிகம்.

அப்பா லோக்கல் கவுன்சிலராக இருந்தவர் என்பதைத் தவிர வேறெதுவும் வீட்டிற்கு செய்துவிடவில்லை. சாதாரண குடும்பம். நான்கு பேர் நாங்கள் அண்ணன், தம்பிகள். எங்கள் பகுதியில் ஒயிட்சாமி வாத்தியார்தான் பள்ளிப் பாடத்தை ஆரம்பத்தில் சொல்லித் தருவார். அவரின் வீடு ரங்கூன் காலனியில் இருந்தது. தினமும் அங்கு சென் றுதான் படித்து வரவேண்டும். அப்போது அதே பகுதியில் எங்கப்பாவின் நண்பர் வீரமான சாமி என்பவரும் இருந்தார். அவரும் கட்சிக்காரர்தான். கவுன்சிலராக இருந்தவர். அவர் வீட்டில்தான் கொஞ்ச நாட்கள் தங்கி சாப்பிட்டு படித்து வந்தேன். அப்பா... அப்பா... என்றுதான் அவரை அழைப்பேன். பின்னொரு காலத்தில் தனது வாரிசுகளை அவர் கட்சியில் கொண்டுவந்தபோது அவர்களை நான் அடித்து ஓடவிட்டதெல்லாம் தனிக் கதை.

அதன்பின்னர் எட்டாவதுவரை கோவில் நகர் பகுதியில் படித்தேன். அதோடு படிப்பிற்கு முழுக்குப் போட்டுவிட்டு தொழில் செய்ய கடற்கரை பக்கம் போய்விட்டேன். எங்கள் தொழிலில் எவ்வளவுதான் உழைத்தாலும் அதிர்ஷ்டம் இருந்தால்தான் வருமானம் கிடைக்கும். எனக்கோ கடல் தொழிலில் அவ்வளவாக அதிர்ஷ்டம் இல்லை. இரவு பகல் பாராமல் படகில் போய் வந்தாலும் பெரிதாக வருமானம் ஒன்றும் கிடைக்காது. அப்படி கிடைக்கும் மீனையும் என் துணைதான் மார்க்கெட்டில் தரையில் கூறுகட்டி விற்றுவருவார். என் தம்பிகளின் நிலையோ அதைவிட மோசம். எனவே எங்களின் வருமானத்தால் நன்றாகச் சாப்பிடக்கூட முடியாத சூழ்நிலை. எனவே கடல் தொழிலை விட்டுவிட்டு கரை தொழிலுக்கு வந்துவிட்டேன். அதாவது கரைவேட்டி தொழிலில் முழுகவனம் செலுத்தத் தொடங்கினேன். எங்கள் கட்சியில் சென்னையின் வடக்குப் பகுதியிலிருந்து எங்கள் ஏரியாவரை எத்தனையோ ஜாம்பவான்கள் இருந்தார்கள். ஒரு காலத்தில்தான் சீனியர், கட்சிக்காகத் தியாகம் செய்தவர் என்பதெல்லாம் சீட் வாங்கத் தேவைப்பட்ட விஷயங்கள். அதன்பிறகு அவையெல்லாம் மறையத் தொடங்க, நாங்களெல்லாம் முளைக்கத் தொடங்கினோம். நானும் கொஞ்சம் கொஞ்சமாக லோக்கலில் பதவி, தொழில் தொடர்பு பதவி என வளர்ந்தேன். எங்கள் பகுதியில் கொஞ்சம் குடும்பங்கள் சேர்ந்து ஒரு பஞ்சாயத்தை நாங்களே உருவாக்கிக் கொள்வோம். அதில் எங்கள் பகுதிக்கு நானே தலைவராக அறிவித்துக்கொண்டேன். அதில் ஊரில் உள்ள சொஸைட்டிக்கு சொந்தமான பணத்தை மற்றவர்களுக்கு பிரித்துக்கொடுத்ததாக கூறி அவர்களின் கையெழுத்தைப் போட்டு பணத்தை கையாடல் செய்ததாக என்மீது குற்றச்சாட்டு எழுந்தது. அதில் அதிரடி ரகளை துவங்கிவிட்டது. அந்தப் பண மோசடிப் புகாருக்குப் பிறகு எனது கையில் கொஞ்சம் பண ஓட்டம் அதிகரித்தது. என் தம்பிகளும் ஓட்டை புல்லட்டை வாங்கி ஓட்டத் தொடங்கினார்கள்.

அதன்பிறகுதான் வாழ்க்கையில் அதிர்ஷ்டம் என்னைத் தேடி வரத் தொடங்கியது. உலகையே உலுக்கிய சுனாமிதான் எனக்கு சுந்தரவாசலைத் திறந்துவிட்டது. எத்தனையோ குடும்பங்களை அழித்தொழித்து நடுத்தெருவுக்கு இழுத்து வந்த அந்த கடல் அலைகள் எங்களை மாளிகைக்குள் கொண்டுபோய் விட்டன. உலக நாடுகளின் பார்வையெல் லாம் சுனாமியின் மீது விழ, எனது பார்வையோ பணத்தின்மீது விழுந்தது. பல்வேறு நாட்டைச் சேர்ந்த அமைப்புகளும், பணக்காரர்களும் பணத்தையும், பொருட்களையும் கொண்டு வந்து கொட்டினார்கள். எங்கள் பகுதியில் நான்தான் வி.ஐ.பி. என்பதால் அவைகளை விநியோகம் செய்யும் பொறுப்பு எனக்கு கிடைத்தது. பொருட்களில் கொஞ் சத்தை பாதிக்கப்பட்டவர்களுக்குக் கொடுத்துவிட்டு மீதத்தை கோயிலில் வைத்துப் பூட்டி வைத்தேன். பணத்தை பீரோவில் வைத்துப் பூட்டினேன். சுனாமி பணத்தை நான் சுருட்டிய விவகாரம் பெரிய விஷயமாகப் பரவிப் போனது.
இந்த பண மோசடி குறித்து என் மீது ஊர் மக்கள் ஒன்றுகூடி நேரில் கமிஷனரிடத்தில் புகார் கொடுத்தனர்.

எங்கள் ஊரின் முன்னாள் தலைவர், கோடிபுண்ணியம் மறைவின்போது அங்கு நானும், என் தம்பிகளும் போயிருந்தோம். அப்போது அங்கு வந்திருந்த கார்மேகம் என்ற பழைய கட்சிக்காரரின் மகன் வேலவனும் வந்திருந்தார். அந்த சாவுக்கு வந்திருந்தவர்களும் சுனாமி பணத்தைப் பற்றி என்னிடம் கேட்க, எனக்கு அசிங்கமாகிப் போனது. அதில் வேலவன்தான் என்னை நேருக்கு நேராக கேள்வி கேட்டான். உடனே எனது தம்பி சங்கு கத்தியைத் தூக்கி வேலவனை வெட்ட அவனின் கைவிரல் மோதிரத்து டன் சிதறிப்போனது. மேலும் பல இடங்களில் வெட்டுக்காயம் ஏற்பட்டு இன்றுவரை அது குணமடையவில்லை.

ஆனாலும், என் ஆத்திரம் அடங்கவில்லை. அன்று இரவே அந்தப் பகுதியில் எனது தம்பிகளையும், அடியாட்களையும் அழைத்துக்கொண்டு போய் எங்களை கேள்வி கேட்ட பதினாறு வீடுகளை அடித்து துவம்சம் செய்தோம். அதிலிருந்தவர்கள் பலர் படுகாயமடைந்து சாய, பலர் தலைதெறிக்க ஓடித் தப்பினர்.

அப்போது அம்மாவின் ஆட்சி நடந்து கொண்டிருந்த காலம். ஒட்டுமொத்த ஊர் மக்களும் எங்களுக்கு எதிராக புகார் கொடுக்க, போலீஸார் என்னைத் தூக்கிக் கொண் டுபோய் உரித்தெடுத்தனர். என் தம்பியைப் பிழிந்தெடுத்தனர். அவன்மீது தேசிய பாதுகாப்பு பிரிவையும் போட்டு சிறையில் அடைத்தனர். அவன் வெளியில் வந்ததும் சங்குவும், இன்னொரு தம்பியான சொக்கத்தங்கமும் சேர்ந்து அந்தக் குப்பத்து மக்களை ஓடஓட விரட்டியடித்தனர்.

இந்தச் சூழ்நிலையில்தான் தேர்தல் வந்தது. முடிந்த தேர்தலுக்கு முந்தைய தேர்தல் வீசிய அலையில் நானும் கரை சேர்ந்துவிட்டேன். கடல் தொழில் தொடர்பான சுழல் விளக்கு எனக்குக் கொடுக்கப்பட்டது. அவ்வளவுதான்... அதன்பிறகு நானும், என் தம்பிகளும் செய்த அராஜகங்களுக்கு அளவே இல்லாமல் போய்விட்டது.

ஏற்கெனவே எங்கள்மீது நடவடிக்கை கோரி நீதிமன்றத்தில் வழக்குப் போட்டு நடத்திக்கொண்டிருந்தனர். எங்களாட்சி அமைந்ததும் ஆளுங்கட்சியினர் மீது நீதிமன்றத்திற்கு வந்த முதல் வழக்கு இதுதான். நீதிபதிகளே எனக்கும் அரசுக்கும் நேரடியாக கண்டனம் தெரிவித்தனர். அரசுக்கு ஏற்பட்ட முதல் தலைக்குனிவு இது. எனவே அந்த வழக்கு தொடர்பான நடவடிக்கைகளை முடக்க திட்டமிட்டோம். அதில் கொஞ்சம் வேகமாக செயல்பட்டுக் கொண்டிருந்தார் துரைசெல்லம். அவரை ஆட்களை வைத்து தூக்கி வரச் சொன்னேன். சுழல் விளக்கு கிடைத்த இரண்டு மாதத்திலேயே துரைசெல்லத்தின் கதை முடிந்துபோனது. துரைசெல்லம் காணவில்லை என போலீஸில் புகார் கொடுக்கப்பட்டது. நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவும் தாக்கல் செய்யப்பட்டது. ஆள் இருந்தால்தானே போலீஸாரால் கொண்டுவர முடியும்? எல்லா விசாரணைகளும் அப்படியே கிடப்பில் போடப்பட்டது.

அதேபோல் எங்களுக்கு அடிக்கடி தொல்லை கொடுத்துவந்த சூலாயுதம் என்பவரையும் காணவில்லை. ஒரு வருடம் கழித்து கோசான் என்ற கம்பெனி எதிரில் மணலில் புதைக்கப்பட்டு, அதன்மேல் பாறைகளை வைத்து மூடப்பட்ட நிலையில் அவரின் சடலம் கிடைத்தது. போலீஸார் அதுபற்றியும் அவ்வளவாக அலட்டிக் கொள்ளவில்லை. இப்படி எங்களின் அராஜகம் ஒரு பக்கம் வளர்ந்துகொண்டிருக்க இன்னொரு பக்கம் கட்சியிலும் எனக்கு கெட்ட பேர் வரத் தொடங்கிவிட்டது. துணையை வாழ்த்தி நான் அடித்த போஸ்டர்கள் எனக்கு எதிராகத் திரும்பிவிட்டன. அவரின் வாரிசை அழைத்து நான் ஒரு விழா எடுக்க, அதுவும் முக்கிய வாரிசால் முகம் சுளிக்கப்பட்டது. எங்கள் பகுதியில் போடப்பட்ட மேடையிலேயே எனக்கு பேச வாய்ப்பளிக்காத சூழ்நிலைகள் உருவாகிப் போனது.

இந்த நிலையில் மீண்டும் தேர்தல் களம் தயாரானது. எனக்கு சீட் கிடைக்குமா என்பதற்கே சீட்டுக் குலுக்கி போட வேண்டிய நிலை. எனக்கு சீட் தந்தால் நிச்சயம் தோல்வி என்பது எங்கள் பகுதி கட்சிக்காரர்களுக்கு முழுவதும் தெரியும். ஆனாலும், சீட்டுக்கள் ஒதுக்கிய நேரத்தில் இருந்த குழப்பமான சூழ்நிலை எனக்கு சாதகமாக அமைந்துவிட்டது. சீட்டும் கிடைத்தது. நான் செய்த அராஜகம், என் தம்பிகள் செய்த அட்டூழியம், ஏழைகளின் பணத்தை ஏப்பம் விட்டது. இயலாதவர்களின் நிலங்களை வளைத்துப் போட்டதெல்லாம் தேர்தலில் வாக்குகள் மூலம் வெளிவந்தது. எந்தத் தொகுதியில் யார் ஜெயித்திருந்தாலும் இந்தத் தொகுதியில் என்னால் ஜெயித்திருக்கவே முடியாது.

எங்கள் கட்சியில்தான் நான் எதிரும் புதிருமாக இருப்பேனே ஒழிய, மாற்றுக் கட்சியினருடன் மாலையில் கைகுலுக்கிக் கொள்வேன். எதிர்க்கட்சியின் மாவட்டப் புள்ளிக்கு நான் மடக்கிய நிலம் ஒன்றை அன்பளிப்பாக கொடுத்துவிட்டேன். என்னை எதிர்த்து அவர் அவ்வளவாக பேசுவது இல்லை. அதேபோல் மாவட்ட சுழல் விளக்கையும் சரிக்கட்டிவிட்டேன். ஆனாலும், எங்கள் சமுதாயத்தைச் சேர்ந்த நாயகர்தான் எல்லா விஷயங்களையும் விசாரிக்கச் சொல்லி நச்சரித்து வருகிறார்.

அதன் பயனாக பிடிபட்டவர்கள்தான் துரை செல்லமும், சூலாயுதமும் என்ன ஆனார்கள். யாரால் கடத்தப்பட்டவர்கள். எப்படி கொலை செய்யப்பட்டார்கள் என்று புள்ளிவிவரமாகக் கூறிவிட்டார்கள். அந்த ஆயுதம் எப்போது வேண்டுமானாலும் என் மீது பாயலாம் என்ற சூழ்நிலை இருக்கிறது.

நாங்கள் உச்சத்திலிருக்கும்போது போட்ட ஆட்டம்தான் இப்போது திரும்பியிருக்கிறது. சண்டையானாலும் சரி, சல்லாபம் ஆனாலும் சரி படகை எடுத்துக்கொண்டு கட லுக்குள் போய்விடுவோம்.

என்பீல்டு கம்பெனியில் ஸ்பேர் பார்ட்ஸ் திருடி விற்ற என் தம்பி சங்கு இன்று கோடீஸ்வரன்.

சொக்கத்தங்கத்திடமும் 200 கோடிகள் சொத்து - என் சொத்தைக் கணக்குப் போட என்னாலே முடியவில்லை.

என்னைத் தலைவர் என்றும் என் தம்பி சங்குவை தளபதி என்றும் இன்னொரு தம்பி சொக்கத்தங்கத்தை சின்னத் தளபதி என்றும்தான் அழைக்கவேண்டும் என்று, நான் போட்டு வைத்த உத்தரவு ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு அப்படியே மாறிவிட்டது. டாஸ்மாக் கடைகளில் நாங்கள் வைத்ததுதான் சட்டம் என்றிருந்ததெல்லாமும் மாறிவிட்டது. மாவட்டத்தில் மாமூல் கொடுத்துவந்த நூற்றுக்கணக்கான பார்களும் நிறுத்திக்கொண்டன. மலபார் டயர் கம்பெனியின் மாதாந்திர கட்டிங்கும் நின்னு போய்விட்டது. ஆனாலும், நாங்கள் மிரட்டி, மடக்கிப் போட்ட, அபகரித்த நிலங்கள் சம்பந்தமான புகார்கள் எதுவும் இன்னும் வரவில்லை என்பது சந்தோஷமான விஷயம்.

இப்போது சுனாமி, கரையிலிருந்து என்னை கடலுக்கு இழுத்துச் செல்ல காத்திருக்கிறது.


நன்றி குமுதம் ரிப்போர்டர்
savukku

No comments:

Post a Comment