Monday, 19 September 2011

சரியான யோசனை!

லோக்பால் மசோதா சட்ட வரையறைக்குள் பிரதமரைக் கொண்டுவர வேண்டும் என்பதும், வேண்டாம் என்பதும் விவாதிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் வேளையில், இந்த மசோதாவில் கார்ப்பரேட் நிறுவனங்களையும் கொண்டுவர வேண்டும் என்று மத்திய லஞ்ச ஒழிப்புத் துறை ஆணையர் பிரதீப் குமார் கூறியிருக்கும் கருத்து, உண்மையிலேயே நியாயமானது, தேவையானது.

கார்ப்பரேட் நிறுவனங்களையும் இந்த மசோதாவுக்குள் கொண்டுவருவதால் என்ன பெரிய மாற்றம் நிகழ்ந்துவிடும் என்று நினைக்கத் தோன்றலாம். ஆனாலும், இன்றைய இந்தியாவில் வெளிப்பட்டுவரும் அனைத்து முறைகேடுகளிலும் கார்ப்பரேட் நிறுவனங்கள், அரசியல்வாதிகள் தொடர்புதான் அதிகமாக இருக்கிறது. இந்தத் தொடர்புதான், ஊழலைப் பல ஆயிரம் கோடி அளவுக்கு உயர்த்தியும் இருக்கிறது.

தற்போது 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு தொடர்பான வழக்கு, ஒன்றுமில்லாமல் போய்விடும் என்று பல வட்டாரங்களில் பேசப்படுகிறது. ராஜா, கனிமொழி உள்ளிட்டோர் வழக்கிலிருந்து விடுதலை அடைந்துவிடுவார்கள் என்று பேசப்படுவதற்குக் காரணம், கார்ப்பரேட் நிறுவனங்களால் அவர்கள் பயன் அடைந்ததை லஞ்சம் என்று சட்டப்படி நிரூபிப்பது கடினம் என்பதாலும், அதற்கான பிடிப்பு தற்போதைய சட்டத்தில் இல்லை என்பதாலும்தான்.

ஒரு நிறுவனத்துக்கு யாரோ பல கோடி கடன் கொடுக்கிறார்கள். ஏன் கொடுத்தார், இவ்வளவு பெரும்தொகையை எந்த ஆவணங்களும், பிணை வைப்பும் இல்லாமல் கொடுப்பார்களா என்ற கேள்விகள் பொதுநியாயமாக இருந்தாலும், சட்டத்தின் முன் இந்தக் கேள்விகள் யாவும் தொழிலில் கொடுப்பவர் - வாங்குபவரைப் பொறுத்த விவகாரம். ஆவணம், பிணைவைப்பு இல்லாமல் எந்த தைரியத்தில் கடன் கொடுத்தாய் என்று சட்டம் கேள்வி கேட்க முடியாது. அப்படிக் கொடுத்ததற்கு, தனிப்பட்ட உள்நோக்கம் அல்லது ஆதாயம், பயன் கிடைத்திருக்கிறது என்பதை நிரூபித்தாக வேண்டும். இது மிகவும் கடினமான செயல். ஓர் அமைச்சரின் ரத்தஉறவு நடத்தும் நிறுவனத்தில் பல ஆயிரம் கோடி முதலீட்டை ஒரு நிறுவனம் செய்தால், அதற்கு உள்நோக்கம் இருந்தாலும் அதை நிரூபிப்பது கடினம்.

பிரதீப் குமார் சொல்வதைப்போல, லோக்பால் சட்டத்தில் கார்ப்பரேட் நிறுவனங்களையும் சேர்த்து, ஒரு வழக்கில் கார்ப்பரேட் நிறுவனம் கொடுத்த பணம், அது கடனாக இருந்தாலும் அல்லது அமைச்சர் சொன்ன நிறுவனத்தில் போட்ட பங்கு முதலீடாக இருந்தாலும் சரி, உள்நோக்கம், தனிஆதாயம் கொண்டது என்ற சந்தேகத்துக்கு வழிவகுத்தாலும்கூட அந்த நிறுவனம் தண்டிக்கப்படும்; அந்த நிறுவனத்தை அரசு கையகப்படுத்திக்கொள்ளலாம், அதன் செயல்பாடுகளுக்குத் தடை விதிக்கலாம் என்கிற அளவுக்குக் கடுமையான சட்டங்கள் இருந்தால் மட்டுமே, கார்ப்பரேட் நிறுவனங்கள் இத்தகைய லஞ்ச முறைகேடுகளில் ஈடுபடாது.

பெரும் திட்டங்கள், தொழில் ஒப்பந்தங்கள், சிறப்புப் பொருளாதார மண்டல அனுமதி, கனிமச் சுரங்க அனுமதி என்று எதை எடுத்தாலும், அரசியல்வாதிகள் லஞ்சம் பெறுவதில்லை. அந்த நிறுவனத்தின் தொழில்பங்குகளை (ஷேர்) குடும்ப உறுப்பினர்கள், பினாமி பெயர்களில் பெற்றுக்கொள்வதுதான் இன்றைய லஞ்ச கலாசாரமாக மாறியிருக்கிறது. தற்போதைய சட்டப்படி தனியார் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க மத்திய லஞ்ச ஒழிப்புத் துறைக்கு அதிகாரம் இல்லை. லோக் ஆயுக்தவுக்கும் அதிகாரம் இல்லை.

அரசு இயந்திரத்தில் மிகச் சாதாரண பொறுப்பில் இருக்கும் உதவியாளர், கடைநிலை ஊழியர்கூட எதைப்பற்றியும் கவலைப்படாமல் லஞ்சம் வாங்கக் காரணம், அவருடைய மேலதிகாரியும் லஞ்சம் வாங்குகிறார் என்பதால்தான். அவரது மேலதிகாரி தனது உயர் அதிகாரியைக் காட்டுவார், அவர் அமைச்சரையும், அமைச்சர்கள் முதல்வரையும் சுட்டிக்காட்டுவார்கள். முதல்வர்கள், மத்திய அமைச்சர்களையும் ஆட்சியாளர்களையும் காட்டுவார்கள்.

ஆட்சி அதிகாரத்தின் உச்ச அதிகாரத்தில் இருப்பவர்கள் லஞ்சம் வாங்காமல் இருந்தால், அதன் விளைவாக அரசு இயந்திரத்தின் கடைநிலை ஊழியர் வரை லஞ்சம் வாங்காத ஒரு சூழல், தானாகவே உருவாகிவிடும். ஆனால், ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்களை லஞ்சம் வாங்கச் செய்பவர்கள் உயர்அதிகாரிகளும் இந்தக் கார்ப்பரேட் நிறுவனங்களும்தான். இதில் கார்ப்பரேட் நிறுவனங்களின் பங்குதான் அதிகம்.

கார்ப்பரேட் நிறுவனங்களின் தலைவர்கள், பிரதிநிதிகள் ஒரு மாநில முதல்வரையோ அமைச்சரையோ மத்திய அமைச்சர் அல்லது பிரதமரையோ சந்திப்பது மரியாதை நிமித்தம் என்று சொல்லப்பட்டாலும், இவர்களது சந்திப்பில் மறைமுக கோரிக்கைகள் இருக்கவே செய்கின்றன. அந்தக் கோரிக்கைகள் பலவும் தனியொரு நிறுவனம் அல்லது நபருக்கு லாபம் தருவதாகவும், அரசு அல்லது பொதுநிறுவனத்துக்கு நஷ்டம் ஏற்படுத்துவதாகவுமே இருக்கின்றன என்பதும், இதன் அளவுக்கு ஏற்ப கார்ப்பரேட் நிறுவனங்கள் லஞ்சம் தர முன்வருவதும்தான் இன்றைய புதிய நடைமுறையாக இருக்கிறது.

அரசியல் கட்சிகளின் தேர்தல் நேரச் செலவுக்குப் பணஉதவியாக இருந்த கார்ப்பரேட் நிறுவனங்கள், இப்போது அரசியல்வாதிகளுக்கு உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் தொழிலில் பங்கு முதலீட்டுக்கு உதவிசெய்து தாங்களும் பலனடைகின்றன என்கிற அளவுக்கு லஞ்சம் புதிய அவதாரம் அடைந்திருக்கிறது. தனியார் மயம், சந்தைப் பொருளாதாரம் என்கிற பெயரில் வர்த்தகம் எந்தவித தர்மத்தையோ, கோட்பாட்டையோ அடிப்படையாகக் கொள்ள வேண்டியதில்லை என்கிற நிலைமை ஏற்படும்போது, வியாபார வெற்றிக்காக எந்தவித விலையும் கொடுக்க கார்ப்பரேட் நிறுவனங்கள் தயாராகின்றன. பல கோடி ரூபாய் ஊழல்களின் ஊற்றுக்கண் இதுதான். எரியும் கட்டையை எடுத்தால், பொங்குவது தானே அடங்கும்.
நன்றி தினமணி

கூடங்குளம் அனுமின்நிலையம்கூடங்குளம் அனுமின்நிலையத்திற்கு எதிராக பொதுமக்கள் 9-வது நாளாக தொடர் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்கள். தமிழக முதல்வர் இது தொடர்பாக பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

பிரச்சினைக்கு முழுமையான தீர்வு காணும் வரை கூடங்குளம் அணுமின் நிலைய பணிகளை நிறுத்தி வைக்கலாம் எனக் கடிதத்தில் கூறியுள்ளார். இக்கடிதத்தை காட்டி பொதுமக்கள் போராட்டத்தை கைவிடுமாறு கோரிக்கை விடுத்தார். இதனால் போராட்டம் கைவிடப்படுமா? என கேள்வி எழும்பியது. இதனைத்தொடர்ந்து போராட்டக்குழு ஆலோசனை நடத்தியது.


முடிவி்ல் போராட்டத்தை கைவிடுவதில்லை என்று முடிவு செய்துள்ளனர். இதனால் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
 

 நன்றி மாலை மலர்

Sunday, 18 September 2011

வாழை இலை உணவு
உணவு உண்பவர்கள் வாழை இலையை இடக்கை பக்கமாக நுனி வருவது போலவும்.


வலக்கை பக்கமாக அகன்ற அடி இலை வருவது போலவும் உண்பது முறையாகும்.


வாழை இலையில் தனலெட்சுமி வாசம் செய்வதாகப் புராணங்கள் கூறுகின்றன.


வறுமை கஷ்டங்கள் நீங்க வேண்டுமானால் வாழை இலையிலேயே சாப்பிட வேண்டும்.


இப்பழக்கம் கொண்டவர்கள் லெட்சுமி கடாட்சம் பெறுவர் என்பது திண்ணம்.


அத்துடன் வாழை இலையில் சாப்பிடுவதால் முகம் பளபளப்பாகி அழகும் வசீகரமும் உண்டாகும்.


தலை முடி கறுப்பாகவே இருக்கும், சீக்கிரத்தில் நரைக்காது.


கண்ட திசைகளுக்கு எதிராகவும் உண்ணுதல் கூடாது.


உண்ணும் போது வடக்கு நோக்கி இருத்தல் நீண்ட ஆயுளும்,

தெற்கு நோக்கி இருத்தல் புகழும்,

மேற்கு நோக்கு இருப்பின் செல்வமும் பெருகும்.


ஒரு மூலையை பார்த்தவாறு உண்ணுதல் கூடாது.


மேற்கண்ட முறையில் உணவை உண்ணுதல் நன்மையைத் தரும்.

தகவல்: நாதன்

ஊழலை அம்பலப்படுத்துவோரை பாதுகாக்க சட்டம் தேவை: அத்வானிஊழல்களை அம்பலப்படுத்துவோரை அரசு பாதுகாக்க வேண்டும், அதற்காக சட்டம் இயற்றப்பட வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் அத்வானி வலியுறுத்தினார்.


தமது இணையதளத்தில் இதை அவர் குறிப்பிட்டுள்ளார்.
"அரசின் திட்டங்களில் நடந்த ஊழல்களை அம்பலப்படுத்திய ஐ.ஓ.சி. ஊழியர் மஞ்சுநாத் சண்முகம், தேசிய நெடுஞ்சாலைத்துறையில் நடந்த ஊழலை வெளிப்படுத்திய இளம் பொறியாளர் சத்யேந்திர துபே ஆகியோர் ஊழல்வாதிகளால் படுகொலை செய்யப்பட்டனர். இப்படி நேராமல் இருக்க, ஊழல்களை அம்பலப்படுத்துவோரை சட்ட ரீதியாகவே பாதுகாக்க ஏற்பாடுகள் தேவை.


பாஜக எம்.பி.க்களை அற்பமாக எடை போட்டனர்: 2008 ஜூலை மாதம் மக்களவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின்போது அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க பாரதிய ஜனதாவின் பகன் சிங் குலஸ்தே, மகாவீர் பகோடா, அர்கல் ஆகியோருக்கு ஆளும் கூட்டணி சார்பில் வலை விரிக்கப்பட்டது.

அவர்களுடைய வாக்குகளுக்கு விலை பேசப்பட்டது. அந்த மூவரும் தாழ்த்தப்பட்ட, பழங்குடி இனத்தவர் என்பதால் பணத்துக்கு எளிதில் விலைபோய்விடுவார்கள் என்று ஆளும் கூட்டணி கணக்குப் போட்டது. ஆனால் அவர்களோ, தங்களை இப்படி அணுகுகிறார்கள் என்று எங்களிடம் தாங்களாகவே தெரிவித்தனர். இந்தச் சதியை அம்பலப்படுத்த வேண்டும் என்பதற்காக அவர்களைத் தொடர்ந்து லஞ்சம் தர முன்வந்தவர்களுடன் பேசி, அவர்களுடைய பேரம் என்ன என்று அறியுமாறு கூறினோம். அப்படி அவர்கள் பணம் கொடுத்தபோது அதை கையும் மெய்யுமாக நிரூபிக்க மக்களவையிலேயே அதைக் கொண்டுபோய்க் காட்டினோம்.

அதை நாடகம் என்றும் நம்பத்தக்கதல்ல என்றும் கூறி அப்போது நிராகரித்தார்கள்.இப்போது பழிவாங்குவதற்காக, உண்மையை அம்பலப்படுத்தியவர்கள் மீதே குற்றம்சாட்டி அவர்களைச் சிறையில் தள்ளிவிட்டனர். இந்தச் சம்பவத்தில் எனக்கும் பங்கு உண்டு என்பதால் என்னையும் கைது செய்யச் சொன்னேன், அரசு இதுவரை மெüனம் சாதிக்கிறது.

சோகமான செப்டம்பர் 6: இந்த மாதம் 6-ம் தேதி பகன் சிங் குலஸ்தேயையும் பகோடாவையும் கைதுசெய்து திகார் சிறையில் அடைத்தபோது மிகுந்த வேதனைப்பட்டேன். அர்கால் இப்போதும் மக்களவை உறுப்பினர் என்பதால் அரசுத் தலைமை வழக்கறிஞரின் கருத்தை மக்களவைத் தலைவர் நாடியிருக்கிறார்.


ஆட்சியைக் காப்பாற்றிக்கொள்ள ஆளும் கூட்டணி தரப்பிலிருந்துதான் லஞ்சம் தருவார்கள். அதை வாங்கியவர்கள் அந்தப் பணத்தைக் கொண்டுவந்து காண்பிக்கிறார்கள் என்றால் அவர்கள் நிரபராதிகள் என்று தெரியவில்லையா? அவர்களையும் சதிகாரர்களோடு சேர்த்துக் கைது செய்தால் நாளை எந்த ஊழலைத்தான் யார்தான் அம்பலப்படுத்த முன்வருவார்கள்? இந்த விவகாரத்தில் ஊழலை வெளிக்கொண்டுவர வேண்டும் என்பதைவிட ஊழலை மறைக்க வேண்டும் என்ற வேகமே வெளிப்படுகிறது. எனவேதான் ஊழலை அம்பலப்படுத்துகிறவர்களுக்கு சட்டப்பூர்வ பாதுகாப்பு தேவை என்பதை வலியுறுத்துகிறோம்' என்று அத்வானி இணையதளத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.

தினமணி 

மோடி??!!


அமைதி, ஒற்றுமை, மத நல்லிணக்கம் ஆகியவற்றை வலியுறுத்தி 2-வது நாளாக குஜராத் முதல்வர் நரேந்திர மோடி உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.
இரண்டவாது நாளான இன்று உண்ணாவிரத இடத்தில் குஜராத் முழுவதிலும் இருந்து பாஜக தொண்டர்களும், தலைவர்களும் பெருமளவில் குவிந்தனர்.

பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் பிரகாஷ் ஜவதேகர், ஷானவாஸ் ஹூசைன், தில்லி பிரிவு பாஜக தலைவர் ஜிதேந்திர குப்தா, காஷ்மீர் பாஜக பொறுப்பாளர் ஜகதீஷ் முஹி, கட்சியின் பிகார் தலைவர் சி.பி.தாக்கூர், பாஜக மஹிள மோர்ச்சா தலைவர் மீனாக்ஷி லெஹி உள்ளிட்டோர் இன்று மோடிக்கு நேரில் ஆதரவு தெரிவித்தனர்.
பாஜக தலைவர்களைத் தவிர பல்வேறு மதங்களைச் சேர்ந்த மதகுருமார்களும் மோடிக்கு ஆதரவு தெரிவித்தனர். சூரத் வைர வியாபாரிகள் சங்கப் பிரதிநிதிகளும், சென்னையைச் சேர்ந்த சிவானந்தா ஆசிரம நிர்வாகிகளும் மோடிக்கு ஆதரவு தெரிவிக்க நேரில் வந்திருந்தனர்.

தினமணி 

Saturday, 17 September 2011

தமிழ் வேந்தர்கள் ஆண்டது தென்பகுதி - திராவிடமல்ல


தாமிரபணி ஆற்றுக்குத் தெற்கே மலய பர்வதத்துடன் கூடிய நிலப்பகுதி, முயல் போன்ற வடிவில் இருந்தது என்று சஞ்சயன் கூறினான். (பகுதி 39). இன்று அங்கு அப்பகுதி அந்த அமைப்பில் இல்லை.
ஆனால் மலய பர்வதம் என்று சொல்லப்பட்டது இன்று மேற்குத் தொடர்ச்சி மலையின் தென் பகுதியாகும்.

அது கன்னியாகுமரியுடன் முடிந்து விடுகிறது. ஆனால் மஹாபாரதம் மற்றும் ராமாயணம் கொடுக்கும் விவரங்களின்படி, தாமிரபரணி ஆறு தொடங்கி தெற்கில் மலய பர்வதம் இன்னும் செல்கிறது.

இந்த மலயபர்வததைக் கொண்ட இடம் சாகத்துவீபம் என்று அழைக்கப்பட்டது.
இந்த உலகின் ஏழு பெரும் நிலப்பகுதிகளில் சாகத்த்வீபமும் ஒன்று.
பாரதவர்ஷம் இருக்கும் ஜம்புத்தீவு என்னும் நாவலந்தீவினைப் போல, சாகத்தீவும் சஞ்சயனால் விரிவாக விளக்கப்பட்டுள்ளது.
அதன் முக்கிய மலை மலய பர்வதம் ஆகும்.

அதாவது இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலையின் தென் பகுதி மலய பர்வதம் எனப்படுகிறது.
அதன் தொடர்ச்சியாக இந்தியக் கடலுக்குள் அந்த மலை நெடுந்தூரம் செல்கிறது.
அதன் முழு நீளத்தையும் உள்ளடக்கி அந்த நாளில் இருந்த நிலப்பரப்பு சாகத் துவீபம் எனப்பட்டது.
மஹாபாரத காலத்தில் ஒரு சிறிய பகுதியாக, அதாவது ஜம்புத்துவீபத்தின் காது போல பாரத வர்ஷத்திலிருந்து தன் கடலில் இந்தப் பகுதி தொங்கிக் கொண்டிருந்தது என்பதை சஞ்சயன் வர்ணனையின் மூலம் தெரிகிறது.

சென்ற பகுதியில், பாண்டவர்கள் பக்கம் நின்று போரிட்ட சாரங்கத்துவஜன் என்னும் பாண்டிய மன்னனைப் பற்றித் தெரிந்து கொண்டோம். சாரங்கத்துவஜன், திருஷ்டத்யுமனுடன் சேர்ந்து துரோணரை எதிர்த்துப் போரிட்டான்.
போரில் துரோணர் கொல்லப்பட்டதைக் கேட்ட அவர் மகன் அஸ்வத்தாமன், வெறி கொண்டு பாண்டவப் படைகளை எதிர்த்தான்.
அப்படி அவன் எதிர்த்தவர்களுள் ஒருவன் பாண்டிய அரசனான மலயத்துவஜன் என்று மஹாபாரதத்தில் வருகிறது. (8-20).
அவர்கள் இருவருக்கும் நடந்த போர் விரிவாக விளக்கப்படுகிறது.
அந்தப் போரில் பாண்டிய அரசன் அஸ்வத்தாமனால் கொல்லப்பட்டான்.
தன் தந்தையைக் கொன்றவர்களுள் ஒருவனான சாரங்கத்துவஜன் மீது அஸ்வத்தாமனுக்குக் கோபம் இருந்திருக்கும்.
அவனுடன் நிச்சயமாகப் போர் புரிந்திருப்பான்.
மலயத்துவஜனுடன் விவரிக்கப்பட்டுள்ள போர் உண்மையில் சாரங்கத்துவஜனுடன் நடந்த போராக இருக்க வேண்டும்.
இதைத் தவிர வேறு எந்த பாண்டியனுடனும் அஸ்வத்தாமா போர் புரிந்ததாக சொலல்ப்படவில்லை.
துரோணரை எதிர்த்துப் போரிடட்வர்கள் பெயரில் சாரங்கத்துவஜன் பெயர் மட்டுமே வருகிறது.
மலய பர்வதம் கொண்ட பாண்டிய நாட்டு மன்னாக இருக்கவே, சாரங்கத்துவஜனுக்கு, மலயத்துவஜன் என்ற பெயர் குலம் அல்லது குடிப் பெயராக இருந்திருக்க வேண்டும்.

மலயத்துவஜ பாண்டியன் என்னும் பெயரில் நாம் அறிந்துள்ள மற்றொரு முக்கிய அரசன், மீனாட்சி அம்மையைப் பெற்றெடுத்த மலயத்துவஜ பாண்டியன்.
மஹாபாரதக் காலத்துக்கு முன்பே மீனாட்சி கதை வந்திருக்க வேண்டும்.
ஏனென்றால், மஹாபாரதக் காலக் கட்டத்தில் இன்று இருக்கும் மதுரை, பாண்டியன் வசம் இல்லை.
பாண்டிய நாடு தாமிரபரணிக்குத் தெற்கே மலய பர்வதத்தை ஒட்டி இருந்திருக்கின்றது.
இன்றைய இந்தியாவில் அந்தப் பகுதி மிகவும் சிறிய பகுதி.எனவே மீனாட்சி பிறந்த மதுரை சங்க நூல் உரையாசிரியர்களால் சொல்லப்பட்ட, கடல் கொண்ட தென்மதுரை என்பது தெளிவாகிறது. மலயத்துவஜன் என்றே பாண்டியன் சாரங்கத்துவஜன் அழைக்கப்படவே, மலயத்துவஜ வம்சமாகப் பல மன்னர்கள் அவனுக்கு முன் இருந்திருக்க வேண்டும்.
எப்படி ராமனும், கிருஷ்ணனும் உண்மையில் வாழ்ந்தார்களோ, அப்படியே மீனாட்சி அம்மையும் மலயத்துவஜ பாண்டியனுக்கு மகளாகப் பிறந்தது உண்மையான நிகழ்ச்சியாக இருக்க வேண்டும். மலயத்தொடர்பு பற்றி மேலும் சில சான்றுகளைப் பார்ப்போம்.

மஹாபாரதத்தில் பாண்டியனைப் பற்றி இரண்டு வர்ணனைகள் அடிக்கடி வருகின்றன.
ஒன்று அவன் முத்து அணிந்திருந்தான்.
மற்றொன்று அவன் சந்தனம் பூசி இருந்தான்.
கறிப்பாக மலய பர்வத சந்தனம் பற்றி கூறப்பட்டுள்ளது.
யுதிஷ்டிரன் செய்த ராஜசூய யாகத்தில் கலந்து கொண்ட பாண்டிய மன்னன் மலய பர்வதத்தில் கிடைக்கும் சந்தனத்தை அளித்தான் என்று வருகிறது.
சுக்ரீவன் தரும் தென்னிந்திய வர்ண்னையிலும், தாமிரபரணி ஆற்றுக்குத் தென் புறம் சந்தன மரங்கள் அதிகம் என்று வருகிறது.
சந்தனம் பற்றிய சங்க நூல் குறிப்புகளில், வட குன்றத்துச் சந்தனம் என்று வட நாட்டில், இமய மலையில் கிடைக்கும் சந்தனத்தைப் பற்றியே அதிக இடங்களில் சொல்லப்பட்டுள்ளது.

ஆனால் சிலப்பதிகாரத்தில் ஓரிடத்தில் ( ஊர்காண் காதை -80) ‘தெண்கண மலயச் செழுஞ்சேராடி “ என்று தெங்கணமும், மலய பர்வதமும் இணைந்த பகுதியில் கிடைக்கும் சந்தனம் பற்றிய குறிப்பு வருகிறது.
பாண்டியன் நிலம், தாமிரபரணிக்குத் தெற்கில் மலய பர்வதத்துடன் கூடி நீண்டிருந்தபோது, அந்தப் பகுதியிலிருந்து சந்தனத்தைப் பெற்றிருக்கிறான்.
அந்தப் பகுதி அடியார்க்கு நல்லார் கூறும் ஏழு நிலப்பகுதிகளில் தெங்க நாட்டுப் பகுதியாக இருக்கலாம்.
மலையை ஒட்டிய கடலோரப் பகுதிகளில் இருக்கும் இன்றைய கேரளத்தில் தென்னை மரங்கள் அதிகம்.
அந்த அமைப்பே நீண்டிருந்த அந்தப் பகுதியில் அந்த நாளில் இருந்திருக்க வேண்டும்.
அதைத் தெண்கண / தெங்கண மலயத்தில் கிடைத்த சந்தனம் என்று கூறியிருக்கலாம்.
இன்றைய கேரளத் தென் பகுதிகள் தெங்க நாட்டுப் பகுதியைச் சார்ந்திருக்கலாம்.


அந்த நிலப்பகுதிகளை கடலுக்கு இழந்த பின், வட நாட்டிலிருந்து சந்தனத்தை வரவழைத்திருக்கிறார்கள்.
இந்த விவரம் சந்தனம் பற்றிய சங்கப் பாடல்கள் மூலம் தெரிகிறது. (பு-நா- 380, அ-நா- 340).
மஹாபாரதக் காலத்தில், பாண்டியனுக்கு வேண்டிய சந்தனத்தை மலய பர்வதமே தந்திருக்கிறது என்பதால்,
மஹாபாரதம் நடந்த 5000 வருடங்களுக்கு முன், இன்றைய தமிழ் நாடு கடலுக்குள் நீண்டிருந்தது என்பது புலனாகிறது.

5000 வருடங்களுக்கு முன் சிந்து சமவெளி நாகரிகம் ஆரம்பித்தது.
அப்பொழுது பாண்டியன், இன்றைய தமிழ் நாட்டுக்கும் தெற்கே வாசம் செய்திருக்கிறான் என்பதை இதன் மூலம் தெளியலாம். அப்பொழுது சோழனும், சேரனும் தமிழ் நாட்டுப் பகுதியில்தான் இருந்திருக்கிறார்கள், சிந்து சமவெளிப்பகுதியில் அல்ல.
அந்த காலக்கட்டத்தில் சோழன் ஆண்ட இடம் பற்றிய குறிப்புகள் இல்லை.
ஆனால் 9000 வருடங்களாகவே புகார் நகரம் புகழுடன் இருந்திருக்கவே, சோழன் புகாரைத் தலைநகரமாகக் கொண்டு ஆண்டிருக்க வேண்டும்.
அந்தக் காலக் கட்டத்தில் இருந்த சேர அரசன், உதியன் சேரலாதன் என்பவன்.
இவன் மஹாபாரதப் போரில் சண்டையிட்ட பாண்டவ, கௌரவப் படைகளுக்குப் பெருஞ்சோறு அளித்தான் என்று கூறும் புற நானூற்றுப்பாடல், அவன் வாழ்ந்த சம காலத்தில் எழுதப்பட்டதாக அமைந்துள்ளது. ( பு-நா-2)

இந்தச் சேர மன்னன் செய்த இச்செயலை உறுதிப்படுத்தும் வண்ணம்
அகநானூறிலும் (233),
பெரும்பாணாற்றுப்படையிலும் (415-7),
நன்னூல் சூத்திர மயிலைநாதர் உரையிலும் (343),
விருத்தி உரையிலும் (344),
இலக்கண விளக்க உரையிலும் (247), சொல்லப்பட்டுள்ளது.
இவை தவிர சிலப்பதிகாரத்தில், மூவேந்தரையும் புகழும் ஓரிடத்தில்,(23-55) அவரவர் பரம்பரையில் உயர்ந்து நின்ற அரசனைப் பற்றிச் சொல்கையில்,
சோழப் பரம்பரையில் சிபியையும்,
பாண்டியன் பரம்பரையில் பொற்கைப் பாண்டியனையும்,
சேரன் பரம்பரையில் உதியன் சேரலாதன் பெருஞ்சோறு அளித்தமை பற்றியும் பாராட்டப்படவே,
மஹாபாரதக் காலத்தில் சேரன் வாழ்ந்தான் என்பது மறுக்க முடியாத உண்மை என்றாகிறது.


அந்த சேரன் ஆண்ட தமிழ்ப் பகுதியில், சூரியன் கிழக்குக் கடலில் உதித்து, மேற்குக் கடலில் மறைந்தது என்று அவனைப் பற்றிக் கூறும் புறநானூற்றுப் பாடல் கூறுகிறது.
அதாவது சேரன் உதியன் ஆண்ட பகுதி கிழக்குக் கடலிலிருந்து, மேற்குக் கடல் வரை பரவி இருந்திருக்கிறது.
வங்கக் கடலிலிருந்து, அரபிக் கடல் வரை பரவி இருந்தது.
அவன் ஆண்ட பகுதிக்குத் தெற்கே தாமிரபரணியும், அதற்குத் தெற்கே பாண்டியனும்.
சேரனது தென் கிழக்குப் பகுதியில் சோழனும் ஆண்டிருந்திருக்கின்றனர்.

மஹாபாரதம் நடந்த 5000 ஆண்டுகளுக்கு முன், தமிழக மூவேந்தர்களும் ஆண்ட பகுதி இவ்வாறு தென்னிந்தியாவில் இருக்க, அதே காலக் கட்டத்தில் சிந்து நதிப் பகுதியில் தமிழன் எவ்வாறு வாழ்ந்திருக்க முடியும்?
5000 வருடங்கள் அல்ல, அதற்கு முன்னும், மூவேந்தர்களும் இதே தென் பகுதியில்தான் வாழ்ந்திருக்கின்றனர் என்பதை ராமாயணம் காட்டுகிறது.

சீதையைத் தேட வானரங்கள் புறப்பட்ட போது, அவர்கள் தலைவனான சுக்ரீவன் நான்கு திசைகளிலுமுள்ள நாடுகள், மலைகள், நதிகள் போன்றவற்றை விவரிக்கிறான்.
பாரதத்தின் வட பகுதியைப் பற்றி அவன் கொடுத்த விவரங்கள் அடிப்படையில் உத்தர குரு போன்ற பிரதேசங்களை நாம் அலசினோம். (பகுதி -35).
அவன் கூறும் தென் பகுதி விவரங்கள் பழந்தமிழ் நாட்டு அமைப்புடன் ஒத்துப் போகிறது.
அவன் சொல்லும் விவரங்களை வால்மீகி ராமாயணம், கிஷ்கிந்தா காண்டம் 41-இல் படிக்கலாம்.

அனுமன் முதலான் வானரங்கள் தென் பகுதியில் செல்ல வேண்டிய வழியை சுக்ரீவன் சொல்கிறான்.
விந்திய மலையைத் தாண்டி தெற்கில் வந்தால் தண்டகாரண்ய வனம் வரும்.
கோதாவரி நதியானது அந்த வனத்தின் குறுக்கே செல்கிறது.
அதைத் தாண்டிச் சென்றால், ஆந்திரம், பௌண்டரம், சோழ, பாண்டிய, சேர நாடுகள் வரும்.
தில் பௌண்டரம் என்பது ஒரிசா, வங்கப் பகுதியில் இருக்கிறது.
ஆந்திரம் என்பது ஆந்திரப் பிரதேசமாகும்.
ராமாயணத்திலும், ஆந்திரம் தனிப் பகுதியாக சொல்லப்படுகிறது.
மஹாபாரதத்திலும் அது தனிப் பகுதியாகச் சொல்லப்படுகிறது.
தமிழ்ப் பகுதிகளுடன் ஆந்திரத்தைச் சேர்த்துச் சொல்லப்படவில்லை.
வேங்கடத்துக்கு வடக்கே இருப்பது ஆந்திரா.
தமிழ் பேசும் மக்கள் அந்தப் பகுதியில் வாழ்ந்ததில்லை என்பதே தொல்காப்பியமும் கூறும் செய்தியாகும்.

இந்த நாடுகளைப் பற்றிச் சொன்னபின் சுக்ரீவன் மலய பர்வதத்துக்கு வந்து விடுகிறான்.
திராவிடம் என்ற நாடு பற்றி ராமாயணத்தில் பேச்சே இல்லை.
அவன் விளக்குவது இந்தியாவின் நேர் தெற்குப் பகுதியாகும்.
இதனால் நேர்த்தெற்கில் திராவிட நாடு இல்லை என்றாகிறது.
மஹாபாரதத்தில் பொதுவாகவே தென்னிந்தியாவில் இருந்த அனைத்து நாடுகளையும் பற்றிச் சொல்லவே அங்கு திராவிட நாடு பற்றி சொல்லப்பட்டு இருக்கிறது.
அதாவது திராவிடம் என்ற பகுதி தெனிந்தியாவில் இருந்திருக்கிறது.
ஆனால் தமிழகமும், ஆந்திரமும் கொண்ட தெற்குப் பகுதியில் அது அமையவில்லை.

ராமாயண வர்ணனையில், மூவேந்தர் நாடுகளைப் பற்றிச் சொன்னவுடன், மலய பர்வதமும், காவிரி நதியும் சொல்லப்படுகிறது.
அங்கு அகஸ்தியர் வாழ்ந்தது சொல்லப்படுகிறது.
அதற்குப் பிறகு தாமிரபரணி ஆற்றைக் கடக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது.
அதற்கும் அப்பால் ‘கவாடம் பாண்டியாணாம் அதாவது பாண்டியர்களது கபாடபுரம் இருக்கிறது.
 
முத்துக்களாலும், பலவித ஆபரணங்களாலும் அலங்கரிக்கப்பட்ட மதில் சுவரால் சூழப்பட்ட கோட்டை அங்கு இருந்தது.
அங்கிருந்து தெற்குக் கடலுக்கு வந்தால் மஹேந்திர மலையை அடையலாம்.
அகஸ்தியரால் அந்த மலை கடலுக்குள் அழுத்தப்பட்டது.
கடலில் முழுகாத பகுதியே மஹேந்திர மலை என்று தெரிகிறது.
அதாவது அந்த மலை ஒரு தொடராக நீண்டிருந்தது.
அதில் பெரும் பகுதி ராமாயண காலத்திலேயே மூழ்கி விட்டிருந்தது.
அங்கிருந்து கடல்புறம் 100 யோஜனை துரம் தாண்டினால் ஒரு தீவு வரும் (இலங்கை),
அங்கே சீதையைத் தேடுங்கள் என்கிறான் சுக்ரீவன்.

இதற்கு மேலும் இன்றைய தென் கடலான இந்தியப் பெருங்கடல் பகுதியில் இருந்த நிலங்கள் குறித்த வர்ணனைகள் வருகின்றன. அவற்றில் இருக்கும் ஒவ்வொரு சொல்லும் முக்கியமானவை.
அவை தரும் அமைப்பும், சாகத்தீவின் அமைப்பும்,
பாண்டியன் ஆண்ட முந்திய நாடுகளின் அமைப்பும் ஒன்றுக்கொன்று இயைந்து இருக்கின்றன.

அவற்றுக்குள் செல்வதற்கு முன், மஹேந்திர மலையையும், கவாடம் என்று சொல்லப்பட்ட அமைப்பையும் அறிவோம்.
இன்றைக்கு மஹேந்திர மலை என்பது திருக்குறுங்குடி என்னும் வைணவ திவ்விய தேசத்தில் இருக்கிறது.
இங்கிருந்துதான் அனுமன் இலங்கைக்குத் தாவிச் சென்றிருக்கிறான்.
இந்தப் பகுதியைப் பற்றிச் சொல்வதற்கு முன்னாலேயே, தாமிரபரணி ஆற்றைக் கடந்தபின் மலய பர்வதத்தின் தொடர்ச்சியாக சொல்லப்பட்ட இடத்தில் கவாடபுரம் என்னும் பாண்டியன் தலைநகரைப் பற்றி சுக்ரீவன் சொல்கிறான்.
இது தென்கடலுடன் இணையும் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியாகும்.
இந்தப் பகுதியைப் பற்றிய சுவையான தகவல்களை அடியார்க்கு நல்லார் மூலம் நாம் அறிகிறோம்.

சிலப்பதிக்கார உரையில் (8-1), ஏழேழ் நாற்பத்தொன்பது நாடுகள் பற்றி அவர் கூறியதை முந்தின பகுதியில் கண்டோம்.
அவை எல்லாம் கடலுக்குல் அமிழ்ந்தன என்கிறார்.
அவற்றுடன் கடலுக்குள் அமிழ்ந்த பிற பகுதிகளில்,
குமரி கொல்லம் முதலிய பன்மலை நாடும்,
காடும், நதியும்,
பதியும்,
தட நீர்க் குமரி வட பெருங்கோட்டின்காறும்
கடல் கொண்டு அழிதலால்
என்கிறார்.
குமரி கொல்லம் முதலிய பன் மலை நாடு என்று சொல்லவே, மலய பர்வதத்தை ஒட்டி அமைந்துள்ள இன்றைய கொல்லம் என்னும் கேரளப் பகுதி பாண்டியன் வசம் அந்நாளில் இருந்திருக்கிறது என்று தெரிகிறது.அந்த இடத்தில் குமரியின் வட பெருங்கோடு இருந்தது என்றும் இதன் மூலம் தெரிகிறது.

கோடு என்றால் மலைச் சிகரம் என்றும் பொருள். நீர்க்கரை என்றும் ஒரு பொருள் உண்டு.
இங்கு குமரி ஆற்றைச் சொலல்வில்லை.
ஏனெனில் இதே விளக்க உரையில், முதலிலேயே பஹ்ருளி ஆற்றையும், குமரி ஆற்றையும் சொல்லி அதற்க்கிடையே உள்ள தூரத்தையும் அடியார்க்கு நல்லார் சொல்லி விட்டார்.

எனவே இங்கு குமரிக் கோடு என்றதும், வட பெருங்கோடு என்றதும்,
குமரி மலைத் தொடரின் வடக்கில் உள்ள மலைச் சிகரமான குமரி என்னும் சிகரம் என்றாகிறது.
அது கொல்லத்தை ஒட்டி அமைந்திருக்கிறது.
இவை எல்லாம் உண்மையே என்பதை இந்தியப் பெருங்கடலின் அடிவாரத்தைக் காட்டும் படங்களில் காணலாம்.

இந்தப் படத்தில் தென்னிந்தியாவின் தென் முனையில்,
மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள மலய மலை கடலுக்குள் தொடர்வதைக் காணலாம்.
கொல்லத்துக்குத் தெற்கே அந்த மலையில் கவாடம் இருந்திருக்கிறது.
அது பஹ்ருளி ஆற்றங்கரையில் இருந்தது.
மலய மலையில் உள்ள மஹேந்திர மலையின் அடிவாரத்தில் இலங்கை இருந்தது என்று ராமாயணம் கூறுகிறது.
இந்தப் படத்தில் அப்படிபட்ட அமைப்பு இலங்கை வரை செல்வதைக் காணலாம்.
இந்தப் பகுதி ராமாயண காலத்திலேயே கடலுக்குள் மூழ்கி விட்டது.

சஞ்சயன் கூற்றின் அடிப்படையில், வட்டத்துக்குள் உள்ள பகுதியே, முயல் வடிவான சாகத்தீவின் பகுதியாக இருந்திருக்க வேண்டும்.
இந்தப் பகுதியில் அப்பொழுது கவாடபுரம் இருந்திருக்கிறது.

அதாவது பஹ்ருளி ஆறு முதல் குமரி ஆறு வரை இருந்த 700 காவதம் / காத தூரமுள்ள குமரிக் கண்டம்
மஹாபாரதக் காலத்துக்கு முன்பே கடலுக்குள் அமிழ்ந்து விட்டிருக்கிறது.


700 காவதம் / காதம் என்பது இன்றைய இந்தியாவின் நீளத்தைப் போல இரண்டு மடங்காகும்.
1 காதம் என்பது ஏழரை நாழிகை தூரம்.
ஏழரை நாழிகை என்பது மூன்று மணி நேரம்.
அந்த மூன்று மணி நேரத்தில் ஒருவன் எத்த்னை தூரம் விறுவிறுப்பாக நடந்து கடப்பானோ அதுவே ஒரு காதம்.
அதை 10 மைல் தூரம் என்று செந்தமிழ் அகராதி கூறுகிறது.
அது 7 மைல் தூரம் என்றும் கூறுவது உண்டு.

7 மைல் என்பது 11.2 கி.மீ ஆகும். மணிக்கு சுமார் மூன்றரை கி.மீ வேகத்தில் ஓரு சாதாரண மனிதன் நடக்க முடியும்.
எனவே காதம் என்பது 7 மைல் / 11.2 கி.மீ என்று வைத்துக் கொண்டால் 700 காதம் என்பது 7,640 கி.மீ என்றாகும்.
பஹ்ருளி ஆற்றுக்கும், குமரி ஆற்றுக்கும் இடையே அத்தனை தூரம் இருந்தது என்கிறார் அடியார்க்கு நல்லார்.
அவ்வளவு பெரிய பகுதி கடலுக்குள் அமிழ்ந்து விட்டது.
அந்தப் பகுதியில் தென்மதுரை இருந்தது.
அங்குதான் முதல் சங்கம் 4,440 வருடங்கள் நடந்தது.

அத்தனை பெரிய நிலப்பரப்பில், கடலும், மலையுமாக இருந்த பூலோக சுவர்கத்தில்
ஆயிரக்கணக்கான ஆண்டுகள் கோலோச்சிய தமிழர்கள்,
பரப்பில் மிகச் சிறிய சிந்து சமவெளி தீரத்திற்கு ஏன் வரவேண்டும்?

5000 ஆண்டுகளே ஆன சிந்து சமவெளி நாகரிகம் எங்கே?

அதற்கும் பல ஆயிரம் வருடங்களுக்கும் அப்பால் வாழ்ந்த தமிழர்கள் எங்கே?

அடாவடி திராவிடவாதிகளுக்குக் கொஞ்சமாவது பகுத்தறியும் சிந்தனை இருக்கிறதா?
 

இந்தியா ஏன் ஏழைநாடு?

நமக்கு தெரிந்த வரை எத்தனை பேர் குறைந்தது மாதம் 1000 தொலைபேசி கட்டணம் செலுத்துகிறோம்? எத்தனை பேர் 500 ரூபாயாவது வாகனத்திற்கு செலவு செய்கிறோம்,  ஏனெனில் சராசரி மனிதன் வருமானம் செலவு இரண்டும் தற்போதைய இந்தியாவில் கட்டுகடங்காமல் சென்று கொண்டிருக்கிறது, ஏன்?

 தனியார் ஆயில் கம்பெனிகளின் விலை நிர்ணய தடை விளக்கப்பட்டுள்ளது? காரணம் அவர்கள் நஷ்டத்தில் வியாபாரம் செய்யமுடியாதாம்? ரிலையன்ஸ் ஆயில் கம்பனியின் பங்கு சந்தையின் விலை என்றாவது குறைந்துள்ளதா? அல்லது அதன் தற்போதைய விலைக்கும் ஆரம்ப கால விலைக்கும் இடையே உள்ள வித்தியாசம் தான் என்ன? ஏன் இந்த ஓரவஞ்சனை?


முகேஷ் அம்பானிதான் தற்போதைய இந்திய பணக்காரர்களில் முதலிடம், ஏன் உலக அரங்கிலும் பணக்கார வர்க்கத்தின் முதல் நிலை பட்டியலில் உள்ளார்!!?? நான் முகேஷ் அம்பானியின் வளர்ச்சியை குறை கூற விரும்பவில்லை? அது தனிமனிதனின் முன்னேற்றமோ அல்லது என்னவாகவோ இருக்கட்டும்.


சராசரி இந்தியனின் இன்றைய  ஒருநாள் வருமானம் 20 ரூபாயாம், இதில் குடும்பம் நடத்துவதென்பது சாமானியனால் எப்படி முடியும்? இதில் ஒரு மீனவனாக இருக்கும் சராசரி தமிழனின் உயிர் கடற்கரையில் பறிக்கப்படுமாயின் அந்த குடும்பத்தின் நிலை?
 
காட்டில் உள்ள கனிமவளங்களை தனியார் வசம் ஒப்படைக்க வேண்டி அங்கே வாழ்ந்த பழங்குடிகளை வலுக்கட்டாயமாக வெளி ஏற்றபட்டதன் மோசமான விளைவு தான் போராட்டகாரர்கள் ஆயுதம் தூக்கியது என்று கூறும் பலரின் கருத்துக்களுக்கு மறுப்பு கூற முடியவில்லையே? அது ஏன்?

ஏன் இந்த கரிசனம் அரசால் காட்டபடுகிறது தனியார் உலக பணக்காரர்கள் வரிசையில் உள்ள முதலாளிகளுக்கு? இங்கிலாந்தில் 4000 பவுண்ட் அதாவது இந்திய மதிப்பில் சுமார் மூன்றரை லட்சம் ரூபாய் கையாடளுக்கு 6 மாதம் சிறை தண்டனையும், பதவி பறிப்பும் உடனே அரங்கேறுகிறது அது மந்திரியாய் இருப்பினும்? ஆனால் இந்தியாவிலோ, 1 .76  லட்சம் கோடிகள் கொள்ளையடிக்கபட்டாலும, இல்லை அரசு பதவிகளை முறைகேடாக பயன்படுத்தி கொள்ளையச்சாலும் எந்த அரசியல்வாதிடம் இருந்தாவது பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதா? என்ன காரணத்தினால் அரசு சொத்து திரும்ப பெறப்படுவதில்லை?

 இதை ஏன்  என்று  இந்திய அரசாங்கத்தை யார் கேள்வி கேட்பது? அல்லது இதை செய்ய முடியாததற்கு என்ன காரணம்? இந்திய அரசியல் சட்டமைப்பா? இந்திய பிரதமரே அரசு பணம் கொள்ளையடிக்கப்படுகிறது என்கிறார்? ஆனால் அதை பறிமுதல் செய்யாமல் விலைவாசியை ஏற்றி கொண்டே போகிறார்? ஏன் என்று பாரதத்தின் தலை சிறந்த பொருளாதார நிபுணர்களில் ஒருவர் என கூறப்படும் திரு சிங்கிடம் யார் கேட்பது?

இந்தியர்களின்  கருப்பு பணம் வெளிநாடுகளில் இருக்கிறது என்று சமீபத்தில் வெளியிட்ட விக்கி லீக்ஸ் அறிக்கையை பற்றி சிறிதாவது அந்த பணத்தை திரும்ப பெற அரசு அக்கறை காட்டுகிறதா?

இதையெல்லாம் விட்டு விட்டு எப்பொழுதெல்லாம் தேசிய அளவில் பிரச்சினை வருகிறதோ அப்பொழுதெல்லாம் ஏன் குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடைபெறுகின்றன என்று விமர்சகர்களால் எழுப்பப்படும் கேள்விகளுக்கு மறுப்பு கூறமுடிகிறதா? உணவு தானியங்கள் வீணானாலும் பரவாயில்லை அதனை ஏழை விவசாயிகளுக்கு தரமுடியாது என்று உச்ச நீதி மன்றத்தின் கண்டனத்துக்குள்ளான விவசாய துறை அமைச்சர் போன்றவர்களை என்ன வென்று கூறுவது? அப்புறம் பட்டினி சாவுகளையும், விவசாயிகளின் தற்கொலைகளையும் எப்படி தடுக்க முடியும்?

இதில் தண்ணீர் பிரச்சினை வருங்காலத்தில் வறட்சியை மேலும் அதிகபடுத்தும் என்பதில் மாற்று கருத்து இருக்கமுடியாது, நதிநீர் இணைப்பே இதற்க்கு ஒரே தீர்வு என்று உலக அளவில் இந்தியாவினை தலை நிமிர செய்த  திரு அப்துல் கலாம் அவர்களின் கருத்தை நிராகரிக்க, ராகுல் காந்திக்கு என்ன அறிவியல் தகுதி உள்ளது? அல்லது அவர் எதுவும் இந்த விசயத்தில் சாதக பாதகங்களை விளக்கி உள்ளாரா? இப்படி இருப்பின் இந்தியாவின் விலை வாசி உயர்வை தடுக்கவும் முடியாது, இந்தியாவை பணக்கார நாடுகளின் வரிசையில் சேர்க்கவும் முடியாது? பட்டினி சாவுகளையும் போராட்டக்காரர்களின் ஆயுதங்களை தவிர்க்கவும் முடியாது.

தற்போதைய  நிலையில் இந்தியாவில் நேர்மையான முறையில் நடைபெறவேண்டிய $462  பில்லியன் பணபரிமாற்றம் ஊழல், லஞ்சம், வரி ஏய்ப்பு, ஏமாற்று வேலை, சமூக கேடான நடவடிக்கைகளினால் தடை பெறுகிறதாம்.

 
இப்பொழுது  சொல்லுங்கள் இந்திய ஏழை நாடாகவே இருக்கும் என்பது உண்மை தானே?


Friday, 16 September 2011

ஹாக்கி இந்தியாவின் தேசிய விளையாட்டா?

பாகிஸ்தான் ஹாக்கி அணியை 4-2 கோல் கணக்கில் வென்று, ஆசிய சாம்பியன் கோப்பையைப் பெற்று வந்திருக்கும் இந்திய ஹாக்கி வீரர்களுக்கு, பரிசுத் தொகை தலா ரூ.25,000-ஐ ""ஹாக்கி இந்தியா'' வழங்கியதை அணியின் வீரர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக ஏற்க மறுத்துவிட்டனர். 


ஹாக்கி வீரர்கள் எடுத்த இந்தச் சரியான முடிவைத் "தினமணி' முழுமனதுடன் வழிமொழிகிறது.இந்தச் செய்தி எல்லா பத்திரிகைகளிலும் வெளியான பிறகு, விளையாட்டுத் துறை அமைச்சர் விழிப்படைந்துவிட்டார். 

அரசு இந்த வீரர்களுக்கு தலா ரூ.1.5 லட்சம் வழங்கும் என்கிறார். கோடீஸ்வரர் வீட்டில் கீரைக் குழம்பு சோறு போட்டதைப்போல, இதில் என்ன கஞ்சத்தனம்? இதுவே இந்திய கிரிக்கெட் அணி, பாகிஸ்தான் அணியை எதிர்த்து விளையாடி வெற்றிபெறுவது, சாதாரண கிரிக்கெட் போட்டியாக இருந்தாலும்கூட, இந்தியாவில் ஊடகங்களிலும், பத்திரிகைகளிலும் எவ்வாறு கொண்டாடப்பட்டிருக்கும் என்பதையும், இவர்களுக்குப் பரிசுகள், பாராட்டுகள் எப்படிக் குவிந்திருக்கும் என்பதையும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

கிரிக்கெட்டில் உலகக் கோப்பை-2011ஐ வென்றதற்காக இந்திய அணியின் வீரர்களுக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அளித்த தொகை ஒவ்வொரு வீரருக்கும் ரூ.2 கோடி. புது தில்லி முதல்வர் ஷீலா தீட்சித், மேலும் ஒரு கோடி ரூபாயை தில்லி வீரர்களான கௌதம் காம்பீர், வீரேந்திர சேவாக், ஆசிஷ் நெஹ்ரா, விராட் கோலி ஆகிய வீரர்களுக்கு அளித்ததுடன், அணித் தலைவர் தோனிக்குத் தனியாக இன்னொரு ரூ.2 கோடியை அளித்துக் கௌரவித்தார். சச்சின் டெண்டுல்கருக்கு மகாராஷ்டிர அரசு, ஒரு கோடி ரூபாய் அறிவித்தது. ஹர்பஜன் சிங், யுவராஜ் சிங் இருவருக்கும் பஞ்சாப் மாநில அரசு தலா ரூ.1 கோடி அளித்தது. உத்தரகண்ட் மாநில முதல்வரோ, சச்சினுக்கும், தோனிக்கும் முசோரி மலைவாசஸ்தலத்தில் வீட்டுமனை ஒதுக்கினார். ஒவ்வொரு வீரரும் குறைந்தது ரூ. 5 கோடி பெற்றார்கள்.

அது உலகக் கோப்பை. இப்போது ஹாக்கி வீரர்கள் வென்றிருப்பது வெறும் ஆசியக் கோப்பைதானே என்று சொல்லக்கூடும். ஆனாலும், பாகிஸ்தானின் மிகவும் பலமான ஹாக்கி அணியை வென்றிருப்பதன் மூலம் மீண்டும் உலக அரங்கில் இந்திய ஹாக்கி அணி முக்கிய இடத்தைப் பெறும் நிலை உருவாகியிருப்பதைப் புரிந்துகொண்டு, இப்போது இவர்களைப் பாராட்டினால்தானே இந்த வீரர்கள் மேலும் ஊக்கம் பெறுவார்கள். 

ஹாக்கி விளையாட்டில் சிறந்து விளங்கினாலும் மதிப்பும், மரியாதையும், பரிசும், பணமும் கிடைக்கும் என்று தெரியவந்தால்தானே புத்தம்புது இளைஞர் கூட்டம் மீண்டும் ஹாக்கி விளையாடத் தொடங்கும்.இந்தியாவின் தேசிய விளையாட்டு ஹாக்கிதான் என்பதையே பலரும் மறந்தாகிவிட்டது. 

உலக அரங்கில் இந்தியாவுக்குப் பெருமை தேடித்தந்த முதல் விளையாட்டு, ஹாக்கிதான். தயான்சந்த் சிங் தலைமையில் 1928-ல் ஆர்ம்ஸ்டர்டாம், 1932-ல் லாஸ் ஏஞ்சலிஸ், 1936-ல் பெர்லின் ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவுக்குத் தங்கப்பதக்கத்தை முதன்முதலில் தேடித்தந்த விளையாட்டு ஹாக்கிதான் என்பதையும் நாம் மறந்தே போய்விட்டோம்.கிரிக்கெட்டின் ஆதிக்கத்தால் ஹாக்கி விளையாட்டு மெல்லமெல்லப் பின்னுக்குத் தள்ளப்பட்டது. 

1980-ல் ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற பின்னர்தான், மீண்டும் ஹாக்கி விளையாட்டு எல்லோராலும் பரவலாகப் பேசப்பட்டது. தனியார் தொலைக்காட்சிகள் எண்ணிக்கை பெருகத் தொடங்கிய பிறகு, அவர்கள் கிரிக்கெட் போட்டிகளுக்கு மட்டுமே முன்னுரிமை அளித்தார்கள். இதனால் ஹாக்கி, கால்பந்து போன்ற விளையாட்டுகள் மீண்டும் பின்னுக்குத் தள்ளப்பட்டன.ஒரு கண்ணில் வெண்ணெய், ஒரு கண்ணில் சுண்ணாம்பு என்பதைப்போல, அரசும் கார்ப்பரேட் நிறுவனங்களும் கிரிக்கெட் என்றால் அதிக முக்கியத்துவம் தருகின்றன. அடுத்தபடியாக செஸ், பாட்மிண்டன், டென்னிஸ் சமீபகாலமாக கோல்ஃப், பில்லியட்ஸ் என்றுதான் கவனம் செலுத்தப்படுகிறது. 

மற்றபடி ஹாக்கி, கால்பந்து என்றால் ஆதரிக்கத் தயாராக இல்லை. இதனால் கிராமங்களில் இருந்த வாலிபால், கால்பந்து, கபடி போன்ற விளையாட்டுகள் இல்லாமல் போய்விட்டன.இந்திய ஹாக்கி அணி 1980 ஒலிம்பிக்கில் தங்கம் வென்றபோது, அந்த அணியில் இருந்த எம்.எம். சோமையா தற்போதைய வெற்றியைப் பாராட்டி, வீரர்களுக்கு அதிகத் தொகை வழங்கிப் பாராட்ட வேண்டும் என்று வலியுறுத்தியதோடு, இன்னொரு உண்மையையும் மத்திய விளையாட்டு அமைச்சகத்தின் கவனத்துக்குக் கொண்டு வந்திருக்கிறார். ""ஆசிய அணிகளுடன் நாம் தன்னம்பிக்கையுடன் விளையாடுகிறோம். ஆனால், இதே தன்னம்பிக்கை ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய நாடுகளுடன் விளையாடும்போது இருப்பதில்லை. 

சென்னையில் 2007-ல் ஆசிய கோப்பையை இந்தியா வென்றது. ஆனால், பெய்ஜிங் ஒலிம்பிக்கில் (2008) தகுதிகூடப் பெற முடியவில்லை. அப்படி மீண்டும் நிகழாமல் இருப்பது இந்த வெற்றியை இந்திய அரசு எவ்வாறு முன்னெடுத்துச் செல்கிறது என்பதைப் பொறுத்து இருக்கிறது'' என்கிறது அவரது எச்சரிக்கை.விபத்தில் இறந்தாலும், துப்பாக்கிச் சூட்டில் பலியானாலும்கூட இறந்தவர் குடும்பத்துக்கு ரூ,5 லட்சம் என்று கருணைத்தொகை உயர்ந்துவிட்ட இன்றைய காலகட்டத்தில், ஓர் ஆசிய அளவிலான வெற்றியைக் கொண்டாட, ஊக்கப்படுத்த, எத்தகைய பரிசுத் தொகை அளிக்க வேண்டும் என்பதுகூடத் தெரியாதவர்களின் கையில் விளையாட்டுத் துறை இருக்கிறது என்பதைத்தான் அரசின் முடிவு வெளிச்சம் போடுகிறது.

அரசு பாராட்டாவிட்டாலும், பரிசுத் தொகை தராவிட்டாலும் என்ன? "தினமணி' வாசகர்களின் சார்பில் நாம் இந்திய ஹாக்கி அணியினருக்கு நமது பாராட்டைப் பதிவு செய்கிறோம். வெல்க... வளர்க... என்று வாழ்த்தி மகிழ்கிறோம்!

நன்றி  தினமணி

Thursday, 15 September 2011

நீர் நிலைகளும் இந்தியாவும்..தண்ணீர் என்பது எவ்வளவு இன்றியமையாதது என்பதை நம்மில் எவ்வளவு பேர் உணர்ந்து அதை பாதுகாக்கவோ அல்லது அதன் வீண் உபயோகத்தையோ தவிர்த்திருக்கிறோம்? நம்மில் எத்தனை பேர் நாம் வாழும் இடங்களில் நீர் வளத்தை மேம்படுத்த முயற்சி எடுத்துள்ளோம்?நீர் இன்றி இவ்வுலகமையாது என்பது பழமொழி, நீருக்காகவே அடுத்த உலக போர் வருமென்பது இன்றைய நிலை, இந்தியாவை எடுத்து கொண்டால் பாகிஸ்தான், பங்களாதேஷ், மற்றும் சீனா வுடன் தண்ணீருக்கான சண்டை வெகு அருகாமையில் உள்ளது?? தற்போதைய இந்திய அரசாங்கம் சண்டை போட்டு தண்ணீர் பெற்று தருமா, தராதா? என்ற கேள்விக்கான பதில், சமீபத்தில் நமது அமைச்சர் ஒருவர் சீனா பலம் கட்டுவதால் இந்தியாவுக்கு உடனடி பாதிப்பு எதுவும் இல்லை என்று விட்ட அறிக்கையே அத்தாட்சி.


உடனடி பாதிப்பு இல்லை என்பதற்காக அதை கண்டு கொள்ளாமல் விட முடியுமா?? இல்லையெனில் அதன் பாதிப்பானது மிக பெரும் புற்று நோயாக இந்தியாவை தொற்றி கொள்ளும். நாம் உடனே சீனாவிடம் சண்டை போட கோர வில்லை, ஏனெனில் அவன் நாட்டில் அவன் கட்டுகிற அணையை தடுக்க நம்மால் எளிதில் முடியாது, இது உலக அரங்கில் இந்தியா எடுத்து வைக்க வேண்டிய மிக முக்கிய பிரச்சினை?


ஆனால் இந்த அணையின் சாதக பாதகங்களை இந்தியா அலசி அதற்க்கு என்ன தீர்வு என்பதை உடனடி நடவடிக்கையாக எடுக்க வேண்டும், ஏனெனில் நாசா 2009 ல் வெளியிட்ட அறிக்கையில், அதிக அடர்த்தி கொண்ட வட இநதிய நகரங்களான ஜெய்பூர், டெல்லி நிலத்தடி நீரானது விவசாய மற்றும் பிற உபயோகத்திற்காக உறிஞ்சபடுவதால் மாயமாகி கொண்டிருக்கிறதாம்,  இதற்க்கு உடனடி நடவடிக்கை எடுக்கவில்லையெனில் 114 மில்லியன் மக்களும் விவசாய மற்றும் குடிநீருக்கு அல்லாடும் காலம் வெகு தொலைவில் இல்லை என்கிறது.


மேலும் ராஜஸ்தான், பஞ்சாப் மற்றும் அரியானா போன்ற மாநிலங்கள் வளர்ச்சி விகிதத்தின் காரணமாக 95 சதவீத நிலத்தடி நீரை உறிஞ்சி விடுகின்றனவாம். இந்த நிலையில் சென்றால் இந்தியா பின் விவசாயத்திற்கு பிற நாடுகளிடம் கையேந்த வேண்டிய நிலை வெகு விரைவில் வரும்.


இது என்னவோ உலக போருக்கான காரணி மட்டுமில்லை, உள்நாட்டு கலவரங்களும் இதன் காரணமாக உருவாகும், தமிழ் நாட்டுடன் தண்ணீர் பிரச்சினை இல்லாத அண்டை மாநிலம் உள்ளதா? தமிழ் நாட்டின் நீர் ஆதாரங்கள் அடியோடு வற்றி விடின் நிலைமை எப்படி இருக்கும் நம் அண்டை மாநிலங்களோடு?? அதே நிலைமைதான் உலகெங்கும் தண்ணீர் ஆதாரங்கள் அனைத்தும் வற்றிவிடின்.மரம் வைத்து மழை வந்தவுடன் நீர் நிலை உடனே உயராது, அதற்க்கு பல மாதங்களும், வருங்களும் கூட தேவைப்படும், ஆனால் அதன் பயனை நம் வருங்கால சந்ததியர்க்கு விட்டு செல்வோம்.


தண்ணீர் வீணாவதை தடுப்பதுமட்டுமல்ல முடிந்தால் அனைவரும் ஆளுக்கொரு மரத்தை தத்துக்கெடுப்போம்.


மேலும் சில எளிய வழிமுறைகள் வீடுகளில் தண்ணீர் சேமிப்பிற்கு,


௧. குழாய்களில் உள்ள துளைகளை அடைக்கலாம், பழுதான குழாய்களை மாற்றி தரமான குழாய்களை பொருத்தலாம்.


வாளிகளை தவிர்த்து ஷவர் பயன்படுத்தலாம்.


சலைவை இயந்திரங்களை வாரமொருமுறை முழு அளவில் துணிகள் நிரம்பியவுடன் உபயோக படுத்தலாம்.


தண்ணீரை சுழற்சி முறையில் உபயோக படுத்தலாம், சலவை செய்த நீரை கழிவறைகளில் உபயோக படுத்தலாம்.


Flush out tank ன் அளவை 5 லிட்டராக குறைக்கலாம்.


மழை நீரை சேமிப்பை கட்டாயமாக்கலாம்.


அனைவரும் சேர்ந்து தண்ணீரின் இன்றியமையா தேவையை உணர்ந்து அடுத்த தலைமுறைக்கு இயன்றதை செய்வோம்..

Tuesday, 13 September 2011

இன்றியமையாத் தேவைகள்!

சித்த மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை எண்ணிக்கை குறைக்கப்பட்டதற்கு அடிப்படைக் காரணம், போதுமான பேராசிரியர்கள் இல்லாததுதான். இந்தக் குறை விரைவில் நிவர்த்தி செய்யப்படும். மீண்டும் மாணவர் எண்ணிக்கை உயரும்'' என்று அரசு அறிவித்துள்ளது.

இந்த நிலைமை சித்த மருத்துவக் கல்லூரிகளுக்கு மட்டுமன்றி, அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் இருக்கிறது. தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி உள்பட, புதிதாகத் தொடங்கப்பட்ட மருத்துவக் கல்லூரிகளில், அதன் அங்கீகாரம் நீடிக்கத் தேவையான துறைகள், மருத்துவப் பேராசிரியர்கள் பற்றாக்குறை உள்ளது. அனுமதி பெறுவதற்காக ஒவ்வொரு முறையும் இடமாறுதல் செய்து, வேறு கணக்குகள் காட்டி, மத்திய மருத்துவக் குழுமத்திடம் அங்கீகாரம் பெறுவதற்குள் நம் சுகாதாரத் துறை அதிகாரிகள் படும்பாடு சொல்லி மாளாது.

சட்டப்பேரவையில் பேசிய தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர், ""மாவட்டம்தோறும் அரசு மருத்துவமனை என்பதைப் படிப்படியாக, ஆண்டுக்கு ஒரு மாவட்டத்தில் ஒரு மருத்துவக் கல்லூரி என்ற வகையில், தேவையான வசதிகள் உள்கட்டமைப்புகளை வலுப்படுத்தி, மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்படும்'' என்று தெரிவித்துள்ளார். அவரே ஒரு மருத்துவர் என்பதால், பிரச்னை என்ன என்பது அவருக்குப் புரிந்திருக்கிறது.

இதே புரிதலுடன் அவர் கவனம் செலுத்த வேண்டிய மருத்துவத் துறைச் சிக்கல்கள் இன்னும் பல இருக்கின்றன. அவற்றில் முக்கியமானவை, புற்றுநோய் சிகிச்சை மையங்கள், நரம்பியல் மருத்துவ மையங்கள் தமிழ்நாட்டின் முக்கியமான நாலைந்து இடங்களில் ஏற்படுத்துவதும் தொற்றிப்பரவும் தன்மையில்லாத நோய்களான சர்க்கரை, உயர் ரத்த அழுத்தம் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளித்து, அதற்கான தனி மருத்துவ மையங்களை மாவட்டம்தோறும் அமைப்பதும் இன்றைய மக்களின் இன்றியமையாத தேவையாக இருக்கின்றன.

காஞ்சிபுரத்தில் கடந்த 41 ஆண்டுகளாகப் ""பேரறிஞர் அண்ணா புற்றுநோய் மண்டல மருத்துவமனை'' செயல்பட்டு வருகிறது. சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் உள்ள நவீன ஆய்வு வசதிகள், மருத்துவ வசதிகள் காஞ்சிபுரம் மருத்துவமனையில் இல்லை. இருந்தும்கூட, பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஏழை மக்கள் இந்த மருத்துவமனைக்கு வருகின்றனர். இவர்களுக்குப் போதுமான படுக்கை வசதிகளும் இல்லை.

தமிழகத்தின் எந்தப் பகுதியில் உள்ளவர்களும் சென்னை பெருநகரை நோக்கித்தான் வர வேண்டும் என்கிற எண்ணமே இக்காலத்துக்குப் பொருந்தாது. சென்னை, சேலம், கோவை, மதுரை, தஞ்சை, திருச்சி, திருநெல்வேலி ஆகிய ஏழு மாநகரங்களிலும் புற்றுநோய், நரம்பியல் சிறப்பு மருத்துவ மையங்களை உருவாக்க வேண்டியது மிகமிக அவசியம். தேவைப்படும் நேரங்களில் சிறப்பு மருத்துவர்கள் இந்த மருத்துவ மையங்களுக்குச் சென்று சிகிச்சை அளிக்க வேண்டுமே தவிர, எல்லா நோயாளிகளும் சென்னைக்கு வர வேண்டும் என்பது எந்தவிதத்திலும் நியாயமாகத் தோன்றவில்லை.

சாலை விபத்துகள் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. 2009-ம் ஆண்டில் மரணம் நேரிட்ட விபத்துகள் 12,727. இதில் இறந்தவர்கள் 13,746 பேர். 2010-ம் ஆண்டில் 14,241 விபத்துகளில் 15,409 பேர் இறந்துள்ளனர். 108 ஆம்புலன்ஸ் சேவை இருப்பதால்தான் இந்த மரணங்கள் குறைவாக இருக்கின்றன. இல்லையெனில், மேலும் கூடுதலாகவே இருக்கும். இருப்பினும்கூட, விபத்துகளில் தலைக்காயம் அடைந்தவர்களுக்குச் சிகிச்சையளிக்க நரம்பியல் சிறப்பு சிகிச்சை மையம் சென்னை போன்ற பெருநகரில்தான் இருக்கிறது. நெடுஞ்சாலை விபத்துகளில் பலத்த தலைக்காயம் அடைந்தவர்களை சென்னைக்கு ஆம்புலன்ஸில் கொண்டுவந்துதான் சிகிச்சை அளிக்க வேண்டும் என்ற நிலை உள்ளது.

உதாரணமாக, சுமார் 300 கி.மீ. தொலைவுள்ள சென்னை - பெங்களூர் நெடுஞ்சாலையில், நரம்பியல் சிறப்பு மருத்துவம் பெற வேண்டுமானால் பெங்களூர், வேலூர், சென்னை ஆகிய மூன்று இடங்களைத் தவிர, வேறு ஊர்களில் இந்த வசதி இல்லை. நெடுஞ்சாலைகளில் 100 கி.மீ. இடைவெளியில் ஓர் அரசு ஆரம்ப சுகாதார மையத்தைத் தேர்வு செய்து, நரம்பியல் சிறப்பு மருத்துவ முதலுதவிக் கூடமாக மாற வேண்டும். இவர்களுக்கு நரம்பியல் சிகிச்சை மருத்துவர்கள் தேவையான முதலுதவி அளிப்பதும், விபத்தால் மூளைக்குள் ஏற்பட்ட அழுத்தத்தைக் குறைக்கத் துளையிடுதல் போன்ற சிகிச்சைகளைச் செய்து, மேல்சிகிச்சைக்காக அனுப்பி வைக்க வசதிகள் ஏற்படுத்துவதும் இன்றியமையாத தேவைகள். இதனால் உயிரிழப்புகள் கணிசமாகக் குறையும்.

108 ஆம்புலன்ஸில் ஒரு விபரீதக் கட்டுப்பாடு இருப்பதாகத் தெரிய வருகிறது. விபத்து நடந்த இடத்திலிருந்து அல்லது பாதிக்கப்பட்டவர் இருக்கும் இடத்திலிருந்து அருகில் இருக்கும் ஒரு மருத்துவமனைக்கு அவரைக் கொண்டுசெல்ல மட்டும்தான் 108 ஆம்புலன்ஸýக்கு அனுமதி உள்ளது. ஒரு மருத்துவமனையிலிருந்து இன்னொரு மருத்துவமனைக்குக் கொண்டுசெல்ல வேண்டுமானால், அந்த மருத்துவமனையின் ஆம்புலன்ûஸப் பயன்படுத்த வேண்டும் அல்லது தனிவாகனத்தில் நோயாளியைக் கொண்டு சென்றாக வேண்டும்.

ஒரு பள்ளிப் பேருந்து கவிழ்ந்ததில் காயமடைந்த 50 குழந்தைகளை அரூர் மருத்துவமனைக்குக் கொண்டுபோன 108 ஆம்புலன்ஸ், அவர்களைத் தருமபுரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முடியாது என்று கூறிவிட்டது. மருத்துவமனை ஆம்புலன்ஸில் அனைத்துக் குழந்தைகளையும் ஏற்ற முடியவில்லை. சில சிறப்பு நேர்வுகளில், 108 ஆம்புலன்ûஸப் பயன்படுத்தவும், அதற்கான கட்டணத்தை அரசு தனியாக அவர்களுக்கு வழங்கவும் வசதி இருக்குமானால், இதற்கு ஒரு தீர்வு காண முடியும்.

மருத்துவர் ஒருவரை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சராக்கி இருப்பதிலிருந்தே தமிழக முதல்வர், இந்தத் துறை சார்ந்த பிரச்னைகளை அதிகாரிகளின் பார்வையில் அணுகாமல் அனுபவரீதியாக அணுக வேண்டும் என்பதில் கவனமாக இருப்பது தெரிகிறது. மக்கள் நல்வாழ்வுத் துறை சார்ந்த மானியக் கோரிக்கையின்போது பேசிய அமைச்சரின் பார்வையும் நோக்கமும் சரியாகவே இருக்கிறது. மேலே நாம் குறிப்பிட்டிருக்கும் பிரச்னைகளையும் கவனத்தில் கொண்டு தமிழக அரசு செயல்பட வேண்டும் என்பது நமது வேண்டுகோள்.

நன்றி தினமணி

Monday, 12 September 2011

சென்னை மாணவர்களின் கண்டுபிடிப்பு: தேசிய அளவில் அங்கீகாரம்

கடல் எல்லை தாண்டி, மீன் பிடிப்பதால் ஏற்படும் பிரச்னையை தவிர்க்க, சென்னையைச் சேர்ந்த கல்லூரி மாணவர்களின் கண்டுபிடிப்புக்கு, தேசிய அளவில் விருது கிடைத்துள்ளது.

கடல் எல்லை தாண்டி மீன்பிடிப்பதால், இந்திய மீனவர்கள் அடிக்கடி தாக்கப்படுவதும், மீன் வலைகள் அறுத்தெறியப்பட்டு, சுட்டுக் கொல்லப்படுவதும், தொடர்கதையாகி வருகிறது. இதை தவிர்க்க, சென்னை செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லூரி மாணவர்கள் நவீன் நெல்சன் இருதயராஜ், பிரின்சி பெர்பச்சுவா ஆகியோர் இணைந்து,"கடல் எல்லையை சுட்டி காட்டும்' கருவியை கண்டுபிடித்துள்ளனர்.

இக்கருவி, மூன்று பாகங்களைக் கொண்டது. முதல் பாகத்தில் எல்.சி.டி., திரையும், இரண்டாம் பாகத்தில் ஜி.பி.எஸ்., ஆன்டனா மற்றும் ஜி.பி.எஸ்., கருவியும், மூன்றாம் பாகத்தில் எரிபொருள் தடுப்பு கருவியும் உள்ளது. ஜி.பி.எஸ்., ஆன்டனா, செயற்கைக்கோளில் இருந்து தகவல் பெற்று, ஜி.பி.எஸ்., டிவைசிற்கு அனுப்பும். அதிலுள்ள திரையின் மூலம், கடல் எல்லையில் பயணிக்கும் இடத்தை தெரிந்து கொள்ள முடியும். எல்.சி.டி., திரையில் மூன்று நிறங்கள் உள்ளன. இதில், மஞ்சள் நிறம் வந்தால் பாதுகாப்பான பகுதி. பச்சை நிறம் மீன்பிடிக்க தகுந்த பகுதி. சிவப்பு நிறம் வந்தால் ஆபத்தான பகுதி என்று அர்த்தம்.

சிவப்பு நிறம் வந்தால், அபாய ஒலி எழும். அபாய ஒலியை கேட்டதும், படகை மீன்பிடி பகுதி அல்லது பாதுகாப்பான பகுதிக்கு கொண்டு செல்ல வேண்டும். இல்லையென்றால், கடல் எல்லையை நெருங்குவதற்குள், இன்ஜினுக்கு செல்லக் கூடிய எரிபொருளை, கருவியின் மூன்றாம் பாகம் நிறுத்திவிடும். இதனால், குறிப்பிட்ட கடல் எல்லையை தாண்டவே முடியாது.
இக்கண்டுபிடிப்பு, "இண்டியன் நேஷனல் அகடமி ஆப் இன்ஜினியரிங்' என்ற அமைப்பின் சார்பில் நடந்த, அகில இந்திய அளவிலான பொறியியல் கல்லூரி மாணவர்களின் கண்டுபிடிப்புகளுக்கான போட்டியில்,"சிறந்த கண்டுபிடிப்பு' விருது பெற்றுள்ளது.

வரும் அக்டோபரில், ஐதராபாத்தில் இப்பரிசு வழங்கப்படுகிறது. இது குறித்து, விருது பெறும் மாணவர்கள், "பத்திரிகைகளில் வந்த எங்கள் கண்டுபிடிப்பை பார்த்து, ஆந்திர மாநில மீன்வளத்துறை எங்களை அழைத்துப் பேசியது. ஆனால், தமிழர் நலனுக்காக நாங்கள் கண்டுபிடித்ததை யாருமே கண்டுகொள்ளாமல் இருப்பது, மிகுந்த வேதனை அளிக்கிறது,' என்றனர்.

நன்றி தினமலர்

நீரினும் நன்று அதன் காப்பு?

இப்போது விவசாயிகள் ஒருவர்பின் ஒருவராக விவசாயத்தைக் கைவிட்டுக்கொண்டிருக்கும் நிலைமை. பலர் பாசனவசதி இருந்தும்கூட வேளாண்மை செய்யாமல் நிலங்களைத் தரிசாக்கும் போக்கு அதிகரித்து வருகிறது. விளைநிலங்கள் குடியிருப்புகளாக மாற்றப்பட்டு வருகின்றன. முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருக்கும் "முதல்வரின் உழவர் பாதுகாப்புத் திட்டம்' இந்தப் பிரச்னைகளுக்கு முழுமையான தீர்வாக அமையாவிட்டாலும் ஓரளவுக்குப் பாதிப்புகளைக் குறைப்பதாக இருக்கும்.

உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் மூலம், விவசாயியின் குடும்பத்தைச் சேர்ந்த அனைவருக்கும் அடையாள அட்டை வழங்குவது என்கிற அறிவிப்பும், கல்வித் உதவித்தொகை, திருமண உதவித்தொகை உள்ளிட்ட சலுகைகளும் தமிழக விவசாயிகளுக்குப் பயனளிக்கும் என்பதோடு, கிராமங்களிலிருந்து விவசாயிகள் வெளியேறும் நிலைமையை ஓரளவுக்குக் கட்டுப்படுத்தும்.

முன்பு அடையாள அட்டை விவசாயக் குடும்பத்தில் குடும்பத் தலைவருக்கு மட்டுமே அளிக்கப்பட்டது. இப்போது அது மாற்றப்பட்டு ஒரு குடும்பத்தில் கணவன், மனைவி இருவரும் விவசாயத்தில் ஈடுபட்டால் அவர்கள் இருவருக்குமே தனித்தனியாக அடையாள அட்டைகள் வழங்க வழிகோலப்பட்டுள்ளது. இதன்மூலம் யாருக்கு இயற்கை மரணம், விபத்து போன்ற பாதிப்பு ஏற்பட்டாலும் நிவாரணம் வழங்கப்படும்.

கிராமப்புறங்களில் பெண்கள்தான் பெரும்பாலும் விவசாய வேலைகள் அனைத்தையும் சிறிது சிறிதாகச் செய்து கொண்டிருக்கிறார்கள். தற்போது அவர்களுக்கும் அடையாள அட்டை கொடுத்திருப்பதன் மூலம், விவசாயப் பெண்களிடையே புதிய உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறார் தமிழக முதல்வர் ஜெயலலிதா.

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் எந்தப் பணி மேற்கொள்ள வேண்டும் என்றும், அத்திட்டம் தேவைதானா என்றும் எந்தவித ஆய்வும் பொறுப்பேற்பும் இல்லாத நிலை இருப்பதால்தான் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது. விவசாயப் பணிகளை மிக அதிகமாகப் பாதித்திருப்பது மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம்தான் என்று எந்த விவசாயியிடம் கேட்டாலும் கண்ணீர்மல்க எடுத்துரைப்பார். பாசன வசதி இருந்தும் பலரும் விவசாயத்தில் ஈடுபடாமல் இருப்பதற்கு மிக முக்கியமான காரணம் வேளாண் பணிகளுக்கு விவசாயத் தொழிலாளர்கள் கிடைக்காமல் இருப்பதுதான்.

ஏரியில் இருக்கும் மண்ணை வெட்டிக் கரையில் போட இரண்டுநாள் வேலை; அதற்குக் கூலி; மறுபடியும் மழையில் அந்த மண் கரைந்து ஏரியில் வண்டலாக நிற்கும். மீண்டும் வாரியெடுத்து கரையில்போட இருநாள் வேலை; அதற்குக் கூலி என்று எந்தப் பொறுப்பும் இல்லாமல் நடைபெறும் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தால் அதிக உழைப்பு இல்லாமல் கூலி கிடைக்கும்போது எப்படி விவசாயப் பணிகளுக்குத் தொழிலாளர்கள் கிடைப்பார்கள். அதுமட்டுமல்லாமல், மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் விவசாயப் பணிகள் நடைபெறாத காலத்தில் மட்டும்தான் நடைமுறைப்படுத்த வேண்டும் என்கிற நிபந்தனை இருந்தாலும்கூட அதை அதிகாரிகள் முறையாகக் கடைப்பிடிப்பது இல்லை என்கிற குற்றச்சாட்டு பரவலாகவே இருக்கிறது. மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் மூலம் மக்களின் வரிப்பணம் விவசாயத் தொழிலாளர்களுக்குக் கிடைக்கிறதோ இல்லையோ சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குப் பயன்படுகிறது என்பதுதான் விவசாயிகளின் மனக்குமுறல்.

உழவர் பாதுகாப்புத் திட்டத்தை மேற்பார்வையிட உயர்நிலைக்குழு ஒன்று அமைக்கப்பட இருக்கிறது. விவசாயக் குடும்பத்தில் குடும்பத் தலைவன், தலைவி இருவருக்கும் மெரூன் வண்ணத்தில் அடையாள அட்டையும், குடும்பத்தின் மற்ற அங்கத்தினர்களுக்கு சாம்பல் நிற அடையாள அட்டையும் வழங்கிவிடுவதுடன் இந்த உயர்நிலைக்குழுவின் பணி முடிந்துவிடாது. இந்த அடையாள அட்டை ஒரு "ஸ்மார்ட் கார்டு'போல, அனைத்து விவரங்களையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். ஒரு விவசாயி அரசு குறிப்பிடும் அளவுக்குள் நிலம் வைத்திருக்கிறார் என்பதோ அல்லது அவர் விவசாயத் தொழிலாளி என்பதோ இத்திட்டத்தில் சேருவதற்கான தகுதியாக இருக்கலாமே தவிர, இது மட்டுமே அவர் சலுகைகளைத் தொடர்ந்து பெறுவதற்கான அனுமதிச் சீட்டாக அமைந்துவிடக்கூடாது என்பதில் அரசு உறுதியாக இருக்க வேண்டும்.

முக்கியமாக ஒரு விவசாயத் தொழிலாளி என்றால் எத்தனை நாள், தனது கிராமத்தில் யார்யாருடைய நிலங்களில் வேலை பார்த்திருக்கிறார் என்கிற தகவலும், சொந்த நிலம் உள்ள விவசாயி என்றால் அவர் என்ன பயிர்களை எந்தெந்த மாதங்களில் சாகுபடி செய்தார் என்ற விவரத்தையும் இந்த "ஸ்மார்ட் கார்டு' மூலம் பதிவு செய்யும் வழக்கத்தை நடைமுறைக்குக் கொண்டு வந்தால் மட்டுமே இத்திட்டம் மிகவும் பயனுள்ளதாக மாறும். இல்லையானால், வெறுமனே அடையாள அட்டை வாங்கிக்கொண்டு, அருகில் இருக்கும் நகருக்குக் கட்டட வேலைக்குப் போவோர் எண்ணிக்கைதான் அதிகரிக்கும்.

அரசின் சலுகைகளைப் பெறும் விவசாயி, தனது நிலத்தில் வேளாண்மை செய்தால், உற்பத்தியின் ஒரு பகுதியை, குறைந்தபட்ச அளவாகிலும் அரசின் வேளாண் விற்பனைக்கூடங்கள் மூலம்தான் விற்றிருக்க வேண்டும் என்ற நிலைமை உருவாதலும், ஒரு விவசாயத் தொழிலாளி ஓராண்டில் குறைந்தபட்சம் இத்தனை நாள் வயலில் வேலை செய்திருந்தால் மட்டுமே சலுகைகள் பெறமுடியும் என்கிற நிபந்தனையும் இருந்தால்மட்டுமே இந்தத் திட்டம் சிறப்பாகச் செயல்படும். அதுமட்டுமல்லாமல், விவசாய நிலங்கள் குடியிருப்புகளாக மாற்றுவதற்கான அனுமதி அண்டை மாநிலமான கேரளத்தில் இருப்பதுபோல கடுமையான சட்டத்தின் மூலம் தடுக்கப்பட வேண்டும்.

தற்போது விவசாயத்தில் ஈடுபடுவோர் தங்கள் குழந்தைகள் விவசாயத்தில் ஈடுபடுவதை விரும்பாத நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலைமை மாறி நகர்ப்புறத்தில் உள்ளவர்கள்கூட விவசாயத்தில் ஈடுபட விரும்பும்வகையில் விவசாயம் லாபகரமானதாகவும் மரியாதைக்குரியதாகவும் மாற்றப்பட்டாக வேண்டும். விவசாயிகள் தங்கள் குழந்தைகளை வேளாண் பட்டம்பெற்று விவசாயத்தில் ஈடுபட ஊக்குவிக்கச் சிறப்புச் சலுகைகள் இந்தத் திட்டத்தில் சேர்க்கப்பட வேண்டும். அப்போதுதான் விவசாயிகளையும், விவசாயத் தொழிலாளர்களையும் கிராமத்தில் தக்கவைப்பதுடன், அவர்கள் தொடர்ந்து வேளாண் தொழிலில் ஈடுபட ஊக்குவிக்கும்.

நன்றி தினமணி